தமிழகத்தில் வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல்... தவிக்கும் மக்கள்
Mar 03, 2023,12:34 PM IST
சென்னை : தமிழகத்தில் புதிய வைரஸ் காய்ச்சல் ஒன்று வேகமாக பரவி வருவதால், மருத்துவமனைகளில் நோயாளிகள் கூட்டம் அதிகரித்து வருகிறது. அதிகரிக்கும் காய்ச்சல் காரணமாக மீண்டும் கொரோனா பரவுகிறதோ என்ற அச்சம் மக்களிடம் இருந்து வருகிறது.
கடந்த சில நாட்களாக தமிழகத்தில் வைரஸ் காய்ச்சல் மிக வேகமாக பரவி வருகிறது. இந்த வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் அதீத காய்ச்சல், உடல் சோர்வால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். காய்ச்சல் பாதிப்பு அதிகம் இருக்கக் கூடிய பகுதிகள் கண்டறியப்பட்டு, போதிய மருத்துவ சிகிச்சை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் மக்கள் பீதி அடைய வேண்டாம் என தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.
சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் 60 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் தீவிர சளி, இருமல், தொண்டை பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டு இருப்பதாக டாக்டர்கள் கூறி வருகின்றனர். இந்த நிலையில் புதிய வைரஸ் காய்ச்சல் பரவி வருவது மக்களை அச்சமடைய வைத்துள்ளது. இதன் அறிகுறிகளும் கொரோனா அறிகுறிகள் போன்றே இருப்பதால் புதிய கொரோனா வகையா என்ற சந்தேகமும் மக்களிடம் எழுந்துள்ளது.