ஜனாதிபதி தேர்தலில் எதிர்ப்பு, இப்போ சப்போர்ட்டா?.. எதிர்க்கட்சிகளை கேட்கும் பாஜக

Aadmika
May 28, 2023,11:16 AM IST
டெல்லி : இந்தியாவின் புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தை எதிர்க்கட்சிகள் புறக்கணித்தது தொடர்பாக சர்ச்சைகளும், விவாதங்களும் எழுந்துள்ளன.

புதிய நாடாளுமன்றத்தை பிரதமர் மோடி இன்று (மே 28) திறந்து வைத்துள்ளார். விழாவில் தமிழகத்தை சேர்ந்த 25 ஆதீனங்கள் பங்கேற்றனர். அவர்கள் கொடுத்த தங்க செங்கோலைப் பெற்று அதை புதிய லோக்சபாவில் சபாநாயகர் இருக்கை அருகே நிலை நிறுத்தி நிறுவினார் பிரதமர் மோடி.

பிரதமர் மோடியிடம் தங்க செங்கோல் ஒப்படைக்கப்பட்டதற்கு நடிகர் ரஜினிகாந்த், இசைஞான இளையராஜா ஆகியோர் நன்றியும் மகிழ்ச்சியும் தெரிவித்துள்ளனர். இது தமிழர்களுக்கு கிடைத்த பெருமை, யாரிடம் சேர வேண்டுமோ அவர்களிடம் செங்கோல் சென்று சேர்ந்து விட்டது என தெரிவித்துள்ளனர். 




ஜனாதிபதியை வைத்து திறக்காமல், பிரதமர் மோடியே புதிய பார்லிமென்ட் கட்டிடத்தை திறக்க உள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்த விழாவை புறக்கணிக்க போவதாக 20 க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சிகள் அறிவித்திருந்தன. அதோடு ஜனாதிபதி திரெளபதி முர்முவிற்கு ஆதரவாகவும் பல விதமாக எதிர்க்கட்சிகள் கருத்து தெரிவித்து வருகின்றன. ஆனால் இந்த விவகாரத்தில் பாஜகவினரும் அவர்களுக்கு ஆதரவானவர்களும் பல்வேறு கேள்விகளை எதிர்க்கட்சிகளிடம் எழுப்பி வருகின்றனர்.

" ஜனாதிபதி தேர்தலின் போது பழங்குடியின இனத்தை சேர்ந்தவரான திரெளபதி முர்முவிற்கு எதிராக, யஷ்வந்த் சின்ஹாவை நிறுத்தியதுடன் அவருக்கு ஆதரவாக பேசி, ஓட்டளித்தீர்கள். இப்போது மோடியை எதிர்க்க வேண்டும் என்னும் போது மட்டும் திரெளபதி முர்முக்கு ஆதரவா? ஜனாதிபதியை அழைக்காதது அவர் சார்ந்த பழங்குடியின மக்களை அவமதிப்பது போன்றது என இதில் கூட ஜாதியை புகுத்தி, அரசியல் செய்கிறீர்களே? 

இப்போது பழங்குடி இனத்தவர் என திரெளபதி மும்முவிற்கு ஆதரவாக இவ்வளவு பேசும் நீங்கள் எல்லோரும் ஜனாதிபதி தேர்தலின் போது எங்கு போய் இருந்தீர்கள்? அப்போது தெரியவில்லையா அவர் பழங்குடி இனத்தை சேர்ந்தவர் என்று? ஏன், பழங்குடி இனத்தை சேர்ந்த ஒருவர் நாட்டின் ஜனாதிபதி ஆகட்டும் என திரெளபதி மும்முவிற்கு ஒரு மனதாக ஓட்டு போட்டு, அவருக்கு ஆதரவு தெரிவித்திருக்க வேண்டியது தானே? அப்போ மட்டும் எதிர்த்தீங்க, இப்போது நீங்கள் அரசியல் செய்ய வேண்டும் என்பதற்காக ஆதரிக்கிறீர்களா?




ஆக மொத்தத்தில் உங்களின் அக்கறையும், நோக்கமும், பிரச்சனையும் ஜனாதிபதி திரெளபதி மும்முவை அழைத்து புதிய பார்லிமென்ட் கட்டிடத்தை திறக்காதது அல்ல. உங்களுக்கு மோடியை எதிர்க்க வேண்டும் அதற்கு ஜனாதிபதியை ஒரு காரணமாக சொல்லி வருகிறீர்கள். ஒருவேளை ஜனாதிபதியே இந்த புதிய கட்டிடத்தை திறந்து வைப்பதாக இருந்திருந்தால், வேறு ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி இந்த விழாவை புறக்கணிக்க போவதாக அறிவித்திருப்பீர்கள். அவ்வளவு தானே?

உங்களின் இந்த அரசியல் விளையாட்டுக்கள் புரியாத அளவிற்கு மக்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல. நீங்கள் சொல்லும் இந்த உருட்டுக்களை உங்கள் கட்சியில் இருப்பவர்கள் கூட நம்ப மாட்டார்கள். 2024 தேர்தலில் மக்கள் உங்களுக்கு பதில் சொல்வார்கள். இப்படியே பேசி பேசியே ஏன் வர்ற கொஞ்சம் நஞ்சம் ஓட்டையும் காலி செய்து கொண்டிருக்கிறீர்கள்?" என சோஷியல் மீடியா தளங்களில் எதிர்க்கட்சிகளை வறுத்தெடுத்து வருகின்றனர்.