தாஜ் மஹாலை பார்த்ததும் முஷாரஃப் கேட்ட முதல் கேள்வி... நினைவுகளை பகிர்ந்த கட்டிடக் கலைஞர்
Feb 06, 2023,02:35 PM IST
ஆக்ரா : தாஜ்மஹாலுக்கு முன்பு பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ்முஷாரப் வந்தபோது கேட்ட கேள்வி இப்போது வைரலாகியுள்ளது.
பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷாரஃப் துபாயில் நேற்று காலமானார். அவருக்கு வயது 79. கடுமையான நோயால் பாதிக்கப்பட்டு, நோயுடன் போராடி வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில் அவரை பற்றிய நினைவுகளை பலரும் பகிர்ந்து வருகின்றனர். ஆக்ராவை சேர்ந்த பிரபல கட்டிடக்கலை நிபுணரான முகம்மதுவும், முஷாரஃப் பற்றிய நினைவுகளை பகிர்ந்துள்ளார்.
2001 ம் ஆண்டு மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிரதமராக இருந்த போது ஆக்ராவில் நடந்த ஒரு மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அப்போது பாகிஸ்தானின் அதிபராக இருந்த முஷாரஃப், தனது மனைவியுடன் இந்தியா வந்திருந்தார். சுமார் 45 நிமிடங்கள் அவர், ஆக்ராவில் உள்ள உலக புகழ்பெற்ற காதல் சின்னமாக போற்றப்படும் தாஜ் மஹாலை சுற்றிப் பார்த்தார். தாஜ் மஹாலை காண வந்த போது முஷாரஃப் பேசியவற்றை தான் முகம்மது தற்போது பகிர்ந்துள்ளார்.
முகம்மது கூறுகையில், தாஜ் மஹாலை பார்த்ததும் முஷாரஃப் கேட்ட முதல் கேள்வி, இதை வடிவமைத்தது யார் என்று தான். நான் ஷாஜகான் என சொல்வேன் என அவர் எதிர்பார்த்திருப்பார் போல. ஆனால் நான் தாஜ் மஹாலை வடிவமைத்தது பாகிஸ்தானின் லாகூரை சேர்ந்த உஸ்தாத் அகம்மது லஹ்ரி என பதிலளித்தேன். அவர் தாஜ் மஹாலை பார்க்க வரும் போது பகல் 3 மணி இருக்கும். என்னை பார்த்ததும் வணக்கம் சொல்லி, மிக கனிவுடன் நடந்து கொண்டார்.
தாஜ் மஹாலை கண்டு தனது வியப்பு போன்ற உணர்வுகளை வெளிப்படுத்திய முஷாரஃப், இரண்டாவதாக கேட்ட கேள்வி, தாஜ் மஹாலை கண்டு ரசிக்க சரியான நேரம் எது என்று. அது அவரவரின் மனநிலையை பொறுத்தது என்றேன். இருந்தாலும் அவர் வலியுறுத்தி கேட்டதால், சூரியன் அஸ்தமிக்கும் சமயத்தில் வெள்ளை மார்பிளால் உருவாக்கப்பட்ட தாஜ் மஹாலை காண மிக அற்புதமாக இருக்கும் என்றேன். அதுவும் அந்த சமயத்தில் மழை பெய்வதாக இருந்தால் அதன் அழகை வர்ணிக்க வார்த்தைகளே இருக்காது என்றேன்.
ஷாஜகான் மற்றும் மும்தாஜ் பற்றி முழுமையாக கேட்டு தெரிந்த பிறகு, வீட்டில் இருப்பது போன்று உணர்வதாக முஷாரஃப் சொன்னார் என்றார் முகம்மது. தாஜ் மஹாலை பற்றி முஷாரஃப் சொன்னதாக முகம்மது பகிர்ந்த இந்த வார்த்தைகள், காதலர் தினம் நெருங்கி வரும் வேளையில் இந்தியாவில் செம பிரபலமாகி வருகிறது.