கைதி இறந்த 2 நாட்களுக்குப் பிறகு ஜாமீன் வழங்கிய மும்பை கோர்ட்!

Su.tha Arivalagan
Jun 07, 2023,11:42 AM IST
மும்பை: மும்பையில் ஒரு கைதி ஜாமீன் கோரி விண்ணப்பித்த நிலையில் அவர் மரணமடைந்த 2 நாட்களுக்குப் பிறகு இடைக்கால ஜாமீன் வழங்கி  கோர்ட் உத்தரவிட்டது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

மும்பையைச் சேர்ந்தவர் சுரேஷ் பவார். 62 வயதாகும் இவர்  ஒரு ரியல் எஸ்டேட் ஏஜென்ட்.  ஒரு சொத்தை மோசடியான ஆவணங்களைத் தயாரித்து விற்றது தொடர்பான வழக்கில் இவர் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட பவார், மும்பை கூடுதல் செஷன்ஸ் கோர்ட்டில் ஜாமீன் கோரி மனு செய்திருந்தார். 



உடல் நலப் பாதிப்புக்குள்ளாகியிருப்பதால், மனித நேய அடிப்படையில் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று பவார் கோரியிருந்தார். மே 9ம் தேதி இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்தது. நீதிபதி விஷால் கைகே தீர்ப்பை ஒத்திவைத்திருந்தார். ஆனால் மே 9ம் தேதியே பவார் மரணமடைந்து விட்டார்.

இந்த நிலையில்  அவர் மரணமடைந்த 2 நாட்களுக்குப் பிறகு பவாருக்கு மருத்துவ காரணங்களுக்காகவும், மனித நேய அடிப்படையிலும் இடை்கால ஜாமீன் வழங்குவதாக நீதிபதி உத்தரவிட்டு தீர்ப்பளித்தார். 

பவார் கடுமையான சர்க்கரை வியாதியால் பாதிக்கப்பட்டவர். அவருக்கு பல்வேறு உடல் நல உபாதைகளும் இருந்தது. இதனால் தொடர் சிகிச்சையில் இருந்து வந்துள்ளார். மேலும் அவருக்கு காலில் கடுமையான காயமும் இருந்தது. கடந்த பிப்ரவரி மாதம் ஏற்பட்ட காயம் இது. சர்க்கரை வியாதி கடுமையாக இருந்ததால் புண் ஆறாமல் இருந்ததாக கூறப்படுகிறது.

தனக்கு உரிய சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கடந்த மார்ச் மாதம் பாம்பே உயர்நீதிமன்றத்திலும் வழக்குத் தொடர்ந்திருந்தார். அதை ஏற்று அவருக்கு சிகிச்சை அளிக்கவும் கோர்ட் உத்தரவிட்டிருந்தது. ஆனால் அவரது உடல் நிலை மோசமானதால் ஜேஜே மருத்துவமனையில் அவரை அனுமதித்திருந்தனர். இந்த நிலையில் தான் இடைக்கால ஜாமீன் கோரியிருந்தார் அவர். ஆனால் அது கிடைப்பதற்குள் மரணமடைந்து விட்டார்.