ஐபிஎல் 2023 எலிமினேட்டர்: 81 ரன் வித்தியாசத்தில் லக்னோவை காலி செய்த மும்பை

Aadmika
May 25, 2023,09:22 AM IST

சென்னை : ஐபிஎல் 2023 கிரிக்கெட் போட்டியில் எலிமினேட்டர் சுற்றில் லக்னோ அணியை வீழ்த்தி அடுத்த கட்டத்திற்கு முன்னேறி உள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி.

நேற்று சென்னை சேப்பாக்கத்தில் நடந்த எலிமினேட்டர் போட்டியில் மும்பை இந்தியன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. இதில் முதலில் பேட் செய்த மும்பை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 182 ரன்கள் எடுத்தது. மும்பை அணியின் சொதப்பல் பேட்டிங்கால் ரசிகர்கள் செம கடுப்பானார்கள். இதனால் மும்பை அணி வெற்றி பெறுவது கஷ்டம் என்ற மனநிலைக்கே ரசிகர்கள் வந்து விட்டனர்.



183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது லக்னோ அணி. ஆனால் லக்னோ அணியிலும் துவக்கம் மோசமாகவே இருந்தது. போட்டியின் 10 ஆவது ஓவரில் ஆகாஷ் மத்வாலின் பந்துவீச்சில் வரிசையாக அடுத்தடுத்து விக்கெட்கள் வீழ்ந்தன. இதனால் ஆட்டம் மும்பை அணிக்கு சாதகமாக திரும்பியது.

இறுதியாக 81 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி அபார வெற்றி பெற்று அடுத்த கட்டத்திற்கு முன்னேறி உள்ளது. குவாலிஃபயர் சுற்றின் முதல் போட்டியில் சென்னை அணியிடம் தோல்வி அடைந்த குஜராத் அணி, அடுத்ததாக மும்பை அணியுடன் பலப்பரிட்சை நடத்த உள்ளது. 

மும்பை - குஜராத் அணிகள் மோதும் குவாலிஃபயர் 2 போட்டி மே 26 ம் தேதி நடைபெற உள்ளது. இதில் வெற்றி பெறும் அணி, பைனலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் மோதும்.

சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் இறுதிப் போட்டியில் மோத வேண்டும் என்பதே பெருவாரியான ரசிகர்களின் விருப்பமாக உள்ளது. அது நடக்குமா அல்லது.. குஜராத் டைட்டன்ஸ் குறுக்கே வந்து இறுதிப் போட்டிக்கு முன்னேறி அங்கு வைத்து சென்னையைப் பழிவாங்குமா என்பது பெரும் எதிர்பார்ப்புக்குரியதாக மாறியுள்ளது.