3 நாட்கள் தாமதம்.. கேரளாவில் ஜூன் 4 ல் துவங்குது தென் மேற்குப் பருவமழை!

Aadmika
May 17, 2023,10:32 AM IST
டில்லி : கேரளாவில் இந்த ஆண்டு மூன்று நாட்கள் தாமதமாக ஜூன் 4 ம் தேதி முதல் பருவமழை துவங்க உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வழக்கமாக ஜூன் 1 ம் தேதி துவங்கும் பருவமழை இந்த ஆண்டு சற்று தாமதமாக துவங்க உள்ளது.

இந்தியாவின் நிலப்பரப்பை பொறுத்த வரையில் பருவமழை தாமதமாக துவங்குவது ஒன்றும் புதியதல்ல.2019 ம் ஆண்டு கேரளாவில் 7 நாட்கள் தாமதமாக பருவமழை துவங்கியது. இருந்த போதிலும் அந்த ஆண்டு வழக்கத்தை  விட கூடுதலாகவே மழைப்பொலிவு பதிவானது.



வழக்கத்திற்கு மாறாக EI Nino நிலவிய போதும் ஏப்ரல் 11 நிலவரப்படி இந்த ஆண்டு சராசரி மழை அளவு பதிவாகும் என வானிலை மையம் தெரிவித்திருந்தது. வங்காள விரிகுடாவில் உள்ள நிக்கோபர் தீவுகளில் உள்ள பகுதிகளில் முன்கூட்டியே பருவமழை துவங்கி விடும். அடுத்த மூன்று நாட்களில் அங்கும் பருவமழை துவங்கும்.

தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு கேரளாவில் தாமதமாக துவங்கினாலும் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாது என வானிலை மையம் தெளிவுபடுத்தி உள்ளது. கேரளாவில் துவங்கும் பருவமழை ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான மழைக்காலம் இந்தியாவில் துவங்குவதற்கான ஆரம்பமாக இருக்கும். அந்தமான் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் இரண்டு வாரங்களுக்கு முன்பாகவே பருவமழை துவங்க உள்ளது.

வங்காள விரிகுடாவின் தெற்கு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே துவங்க உள்ளதாகவும் வானிலை மைய மூத்த விஞ்ஞானி ஜெனமணி தெரிவித்துள்ளார்.