செந்தில் பாலாஜி சார்பில் ஜாமின் மனு தாக்கல்

Aadmika
Aug 29, 2023,12:29 PM IST
சென்னை : அமைச்சர் செந்தில் பாலாஜி சார்பில் சென்னை கோர்ட்டில் ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அவசர மனுவாக விசாரிக்கவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் செந்தில் பாலாஜி, அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த போது, போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக பலரிடமும் பணம் வாங்கி ஏமாற்றியதாக செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் மீது புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரில் பல ஆண்டுகளுக்கு பிறகு விசாரைணயை துவக்கிய அமலாக்கத்துறை அதிகாரிகள், சமீபத்தில் செந்தில் பாலாஜி மற்றும் அவரது உறவினர்களுக்கு சொந்தமான இடங்களில் அதிரடி சோதனை நடத்தியது.



இந்த சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு, அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வந்தது. இதற்கிடையில் செந்தில் பாலாஜி பலமுறை கோர்ட்டில் ஜாமின் கேட்டு மனுத்தாக்கல் செய்து விட்டார். ஆனால் அவர் அமைச்சராக உள்ளதாக அவருக்கு ஜாமின் வழங்கினால் வழக்கின் விசாரணை முறையாக நடக்காது என்பதால் அவருக்கு ஜாமின் வழங்க அமலாக்கத்துறை எதிர்ப்பு தெரிவித்து வந்தது.

இந்நிலையில் செந்தில் பாலாஜி சார்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜாமின் கேட்டு மீண்டும் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்கக் கோரி மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ என்பவர் மனுத்தால் செய்துள்ளார். ஏற்கனவே செந்தில் பாலாஜி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமின் மனுவை விசாரிக்க அதிகார வரம்பு இல்லை எனக் கூறி சென்னை சிறப்பு கோர்ட் மனுவை திருப்பி அனுப்பியது.

இந்நிலையில் மீண்டும் ஜாமின் கேட்டு முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி சார்பில் மனுத்தால் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரைணக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.