"எல்லாத்தையும் உடைச்சேன்".. அசர வைக்கும் மேகலா சித்ரவேல்.. இவரது மகன்தான் வெற்றிமாறன்!
Jul 03, 2023,02:22 PM IST
சென்னை: எதையெல்லாம் பெண்கள் செய்யக் கூடாது என்று எங்க வீட்டில் வைத்திருந்தார்களோ அதையெல்லாம் நான் உடைச்சேன் என்று கூறியுள்ளார் எழுத்தாளர் - ஆசிரியர் மேகலா சித்ரவேல்.. இவரது மகன்தான் இயக்குநர் வெற்றிமாறன் என்பது மேகலாவின் கூடுதல் சிறப்பு. தற்போது டாக்டர் பட்டம் பெற்று அசத்தியுள்ளார் மேகலா சித்ரவேல்.
மேகலா சித்ரவேல் பேசப் பேச.. அடடா இப்படி ஒரு அம்மா நமக்கும் வேண்டுமே என்று ஆசைப்படும் அளவுக்கு அத்தனை எதார்த்தமாக, அறிவுப்பூர்வமாக , பாசத்தோடும், வாஞ்சையோடும் பேசுகிறார் மேகலா சித்ரவேல். ஆசிரியையாக இருந்து பின்னர் பள்ளி ஒன்றை தொடங்கி அதை நடத்தி வரும் மேகலா சித்ரவேல் அனைவரின் கவனத்தையும் சமீபத்தில் கவர்ந்தார். அது, சென்னை வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் அவர் பிஎச்டி ஆய்வை முடித்து அந்த பட்டத்தை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கையில் வாங்கியதுதான்.
எம்ஜிஆர் பாடல்கள் குறித்த ஆய்வில்தான் பிஎச்டி முடித்துள்ளார் மேகலா சித்ரவேல். இவர் அடிப்படையில் ஆசிரியை மட்டுமல்லாமல், எழுத்தாளரும் கூட. கமலி அண்ணி, ரதிதேவி வந்தாள், வசந்தமே வருக, மழை மேக மயில்கள், கங்கா என்ற ஐந்து நாவல்களை எழுதியுள்ளார். இவர் எம்ஜிஆர் குறித்து எழுதியிருந்த பல குறிப்புகளைப் பார்த்து வியந்த பேராசிரியர் பிரபாகர், நீங்கள் பேசாமல் பிஎச்டி பண்ணலாமே என்று கூறி அவரை ஊக்குவித்தார். மேகலா சித்ரவேலும் இதுகுறித்து தனது மகனிடம் கூற, உடனே சேருங்க என்று கூறி ஊக்கம் கொடுத்தார் வெற்றிமாறன்.
இதைத் தொடர்ந்துதான் சென்னை வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் எம்ஜிஆர் பாடல்கள் குறித்த ஆய்வுப் படிப்பை தொடங்கினார் மேகலா சித்ரவேல். இந்த ஆய்வை வெற்றிகரமாக முடித்து இப்போது டாக்டரேட் வாங்கி அசத்தியுள்ளார். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்டம் வழங்க அதைப் பெற்று மகிழ்ந்தார் மேகலா சித்ரவேல்.
தனது தாயார் டாக்டரேட் வாங்கியதை முதல் வரிசையில் அமர்ந்து கை தட்டி மகிழ்ந்தார் வெற்றிமாறன். தனது படிப்பு குறித்தும், டாக்டரேட் குறித்தும் மகழ்ச்சி தெரிவித்துள்ள மேகலா சித்ரவேல் சமீபத்தில் ஒரு சானலுக்கு அளித்த பேட்டியின்போது கூறுகையில், எனது குடும்பத்தில் யாரும் அதிகமாக படிக்கவில்லை. எனக்குப் படிக்க ஆசை அதிகம். கல்விதான் ஒருவரை உயர்த்தும்.
11வது முடித்தவுடனேயே எனக்குத் திருமணம் ஆகி விட்டது. எனது கணவரிடம் நான் டிகிரி படிக்க வேண்டும் என்று தெரிவித்தபோது அவர் தடை விதிக்கவில்லை. மாறாக, என்ன விருப்பமோ படி என்று ஆதரித்தார். இதையடுத்து பிஏ படித்தேன். பிறகு எம்.ஏ படித்தேன். பிஎட் முடித்தேன்.. எம்எட், எம்பில்லும் படிக்க ஆரம்பித்தேன். ஆனால் முடிக்க முடியவில்லை. இப்போது டாக்டரேட் முடித்து விட்டேன்.
எனது மனதுக்கு சரி என்று பட்டால் அதை உடனே செய்வேன். இப்போதும் அப்படித்தான். எதையெல்லாம் எனது வீட்டில் தவறு என்று வைத்திருந்தார்களோ அதையெல்லாம் உடைத்தேன். நான்தான் முதலில் டிகிரி முடித்த பெண். நான்தான் முதன் முதலில் வெளியே போய் வேலை பார்த்தவள். எனது பெண்ணையும் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் டாக்டருக்குப் படிக்க வைத்தேன் என்று கூறி சிரித்தார் மேகலா சித்ரவேல்.