இன்று மாசி அமாவாசை : பல தலைமுறை பாவம் போக்கும் முன்னோர்கள் வழிபாடு
சென்னை : மாசி மாதம் என்பது வழிபாட்டிற்கு உரிய மகத்தான மாதமாகும். இந்த மாதத்தில் செய்யப்படும் குலதெய்வ வழிபாடு, இஷ்ட தெய்வ வழிபாடு, முன்னோர் வழிபாடு, புனித நீராடல் ஆகியன பல மடங்கு பலன்களை நமக்கு பெற்றுத் தரும். இந்த ஆண்டு மாசி மாத அமாவாசை பிப்ரவரி 20 ம் தேதியான இன்று வருகிறது.
பிப்ரவரி 19 ம் தேதி மாலை 4 மணிக்கே அமாவாசை திதி துவங்கி விட்டாலும், சூரிய உதய காலத்திலேயே முன்னோர் தர்ப்பணம் கொடுக்க வேண்டும் என்ற நியதி உள்ளதால் பிப்ரவரி 20 ம் தேதியே அமாவாசை நாளாக கணக்கிடப்படுகிறது. பிப்ரவரி 20 ம் தேதி பகல் 01.47 வரை அமாவாசை திதி உள்ளது. அதனால் பகல் 01.30 மணிக்குள் காகத்திற்கு உணவளித்து, நாமும் உணவு சாப்பிட்டு, விரதத்தை நிறைவு செய்து கொள்ளலாம்.
பிப்ரவரி 20 - இன்று இதை செய்ய மறந்துடாதீங்க ?
ஒரு ஆண்டில் 96 தர்ப்பணங்கள் கொடுக்க வேண்டும் என சாஸ்திரங்கள் சொல்கின்றன. மாதந்தோறும் அமாவாசை திதி வந்தாலும் குறிப்பிட்ட சில மாதங்களில் வரும் அமாவாசை திதி கூடுதல் சிறப்பு பெறுகிறது. தை அமாவாசை, ஆடி அமாவாசை, புரட்டாசியில் வரும் மகாளய அமாவாசை ஆகியன மிக முக்கியமானதாக சொல்லப்படுகிறது. அதே போல் மாசி மாத அமாவாசையும் தனிச்சிறப்பு வாய்ந்தது.
மற்ற மாதங்களில் அமாவாசையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது குலத்தை காக்கும், குடும்பத்தை சிறக்க வைக்கும் என்பார்கள். ஆனால் மாசி மாதத்தில் பெளர்ணமி அன்றும் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது சிறப்பான பலன்களை தரும். இந்த நாளில் அதிகாலையில் எழுந்து, நீராடி , முன்னோர் வழிபாடு மேற்கொள்ள வேண்டும். ஆறு, குளம், கடலில் புனித நீராடுவது மிகவும் புண்ணியமானதாகும். முன்னோர் தர்ப்பணம் கொடுக்க வேண்டும். மாலையில் குல தெய்வத்தை வழிபட்டு விரதத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.
மாலையில் வீட்டு வாசலில் மாவிலை தோரணம் கட்டி, குலதெய்வத்தை வழிபடுவதன் மூலம் நமது முன்னோர்களின் மனதை குளிர்வித்து அவர்களின் ஆசியை பெறுவதுடன் குலதெய்வத்தின் அருளையும் பரிபூரணமாக பெற முடியும். அமாவாசை நாளில் முன்னோருக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபடுவதன் மூலம் நாம் செய்த பாவம் மட்டுமின்றி, பல தலைமுறைகளாக நமது முன்னோர்கள் செய்த பாவங்களும் தீர்ந்து, அவர்களின் ஆன்மா நற்கதி அடையும்.
முன்னோர் வழிபாட்டை மேற்கொள்வதால் குடும்பத்தில் ஒற்றுமை சிறக்கும். பிரச்சனைகள், திருமண தடை போன்ற தடைகள், தோஷங்கள் நீங்கும். குலம் செழிக்கும். குழந்தை பேறு உண்டாகும்.