மரகதவல்லிக்கு மணக்கோலம்.. மதுரையில் கோலாகலமாக நடந்தது  மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்

Aadmika
May 02, 2023,12:20 PM IST
மதுரை: மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண மதுரையில் இன்று கோலாகலமாக நடைபெற்றது.

ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேரிலும், லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலை சுற்றி அமைக்கப்பட்டுள்ள பெரிய எல்இடி திரைகளிலும் திருக்கல்யாண வைபவத்தை கண்டு மகிழ்ந்தனர்.

உலகப் புகழ்பெற்ற மதுரை சித்திரை திருவிழா, இந்த ஆண்டு ஏப்ரல் 23 ம் தேதி தங்க கொடி மரத்தில் கொடியேற்றத்துடன் துவங்கியது. ஏப்ரல் 30 ம் தேதி மீனாட்சி அம்மன் பட்டாபிஷேக விழாவும், மே 01 ம் தேதி அம்பாளின் திக்விஜயமும் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து இன்று (மே 02) காலை 08.35 மணி முதல் 08.59 மணிக்குள் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. திருக்கல்யாணத்தை நேரில் காண ஆன்லைன் மூலம் 5000 க்கும் அதிகமான பக்தர்கள் முன்பதிவு செய்திருந்தனர்.



மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்தை நடத்தி வைப்பதற்காக நேற்று, திருப்பரங்குன்றத்தில் இருந்து பவளக்கனிவாய் பெருமாளும், தெய்வானையுடன் சுப்ரமணிய சுவாமியும் மதுரைக்கு எழுந்தருளினர். பல விதமான மலர்களால்அலங்கரிக்கப்பட்ட மணமேடையில், அம்பாள் மற்றும் சுவாமிக்கு பவளகனிவாய் பெருமாள், கன்னிகா தானம் செய்து வைக்க, திருக்கல்யாண வைபவம் கோலாகலமாக நடைபெற்றது. 

பிரியாவிடை அம்மனுக்கும், மீனாட்சி அம்மனுக்கும் திருமாங்கல்யம் அணிவிக்கப்பட்ட சமயத்தில், ஏராளமான பெண்கள் தங்களின் தாலி கயிற்றை மாற்றிக் கொண்டு, தீர்க்க சுமங்கலி வரம் பெற மீனாட்சி அம்மனை வேண்டிக் கொண்டனர்.

சுவாமி தரிசனம் செய்யவும், திருக்கல்யாணத்தை காணவும் வந்த லட்சக்கணக்கான பக்தர்களுக்கு சுட சுட சாம்பார், கூட்டு, பொரியல், பாயசம் ஆகியவற்றுடன் திருமண விருந்து அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மதுரை சேதுபதி உயர்நிலைப் பள்ளி உள்ளிட்ட இடங்களில் திருமண விருந்து அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுவதால் கோவிலை சுற்றி உள்ள வீதிகளில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பக்தர்களுக்கான ஏற்பாடுகளும் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது. 

இன்று மாலை திருமணக் கோலத்தில் சுவாமியும், அம்பாளும் திருவீதி உலா செல்லும் நிகழ்வு நடைபெற உள்ளது. இதைத் தொடர்ந்து மே 03 ம் தேதியான நாளை காலை திருத்தேரோட்ட நிகழ்வு நடைபெற உள்ளது. அத்துடன் வைகை ஆற்றின் தென்கரையில் நடைபெறும் நிகழ்வுகள் நிறைவடைகிறது. இதைத் தொடர்ந்து வடகரையில் கள்ளழகர், அழகர்மலையில் இருந்து புறப்பட்டு மதுரை வரும் நிகழ்வும், மூன்று மாவடி பகுதியில் தல்லாகுளம் பிரசன்ன வெங்கடேச பெருமாள், கள்ளழகரை எதிர்கொண்டு அழைக்கும் எதிர்சேவை, கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் ஆகியன நடைபெற உள்ளன.