தேஜஸ் ரயிலில் இத்தனை அரசியலா?... தமிழ்ல பெயர் வச்சா தப்பா?.. மதுரை எம்பி கேள்வி!

Aadmika
Feb 27, 2023,12:54 PM IST

மதுரை : தேஜஸ் ரயிலுக்கு தமிழில் பெயர் வைக்க வேண்டும் என கோரிக்கைக்கு மட்டும் வாய்திறக்காமல் மெளனமாகவே இருக்கிறீர்களே என பாஜக அரசை கேள்வி கேட்டுள்ளார் மதுரை எம்.பி. சு. வெங்கடேசன்.


தமிழக அரசியல் கட்சிகள், பயணிகளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, சென்னையில் இருந்து புறப்படும் தேஜஸ் ரயில் இனி தாம்பரத்தில் நிற்கும் என சமீபத்தில் தெற்கு ரயில்வே அறிவித்தது. இதனையடுத்து இது உடனடியாக நடைமுறைக்கும் வந்தது. 


Jokes: நீங்க சொல்லிக் கொடுத்து அறிவு வராதா டீச்சர்!!!


நேற்று தாம்பரம் இடை நிறுத்தத்தை மத்திய இணையமைச்சர் முருகன் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் எம்.பி. டி.ஆர். பாலுவும் கலந்து கொண்டார். பெரும் திரளான திமுக, பாஜக தொண்டர்களும் திரண்டு வந்து பாரத் மாதி கி ஜெய், ஸ்டாலின் வாழ்க என்று மாறி மாறி கோஷம் போட்டதால் பரபரப்பும் ஏற்பட்டது. மேலும் ரயில் நிறுத்தம் பாஜகவின் வெற்றி என்று அக்கட்சியினர் பேசி வருகின்றனர்.


இது பற்றி மதுரை எம்பி வெங்கடேசன் தனது ட்விட்டர் பக்கத்தில், தேஜஸ் அரசியல் என்ற தலைப்பில் கேள்வி எழுப்பி உள்ளார். அதில் அவர், தேஜஸ்  எக்ஸ்பிரஸ் தாம்பத்தில் நிறுத்தப்பட வேண்டுமென்று அந்த தொகுதியின் எம்பி.,யான திரு.டி.ஆர்.பாலு அவர்கள் தொடர்ந்து வலியுறுத்தினார். மதுரை எம்பி.,யான நான் திண்டுக்கல் மற்றும் தாம்பரத்தில் நிறுத்த இடைவிடாது போராடி உள்ளேன். எங்களின் போராட்டம் வெற்றி பெற்றுள்ளது.


இடை நிறுத்தத்திற்கு கொடியசைக்க வந்த மத்திய இணையமைச்சர் முருகன் அவர்களே, தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு தமிழ்ச்சங்க எக்ஸ்பிரஸ் என்று  பெயர் மாற்ற வேண்டும் என தொடர்ந்து கோரி வருகிறோம். நீங்களும் உங்கள் அரசும் இது பற்றி மெளனம் காப்பது ஏன் என அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.