தேனி எம்.பி தொகுதியில் ஓ.பி. ரவீந்திரநாத் வெற்றி பெற்றது செல்லாது - ஹைகோர்ட்
Jul 06, 2023,05:28 PM IST
சென்னை: தேனி மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஓ.பி. ரவீந்திரநாத் வெற்றி பெற்றது செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது.
வழக்கறிஞர் மிலானி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்குத் தொடர்ந்திருந்தார். அதில் தேனி நாடாளுமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வென்ற ஓ.பி. ரவீந்திரநாத், தனது சொத்துக் கணக்கை சரியாக சமர்ப்பிக்கவில்லை. குறிப்பாக வங்கியில் பெற்ற ரூ. 10 கோடி கடன் குறித்த விவரத்தை தனது வேட்பு மனுவில் தெரிவிக்கவில்லை. மேலும் தேர்தலின்போது வாக்காளர்களுக்குப் பணப் பட்டுவாடா நடந்துள்ளது . எனவே அவரது வெற்றி செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. தீர்ப்பில், ஓ.பி. ரவீந்திரநாத்தின் வெற்றி செல்லாது என்று கோர்ட் அறிவித்து தீர்ப்பளித்தது. இதைத் தொடர்ந்து ஓ.பி. ரவீந்திரநாத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல்செய்யவுள்ளதால் தீர்ப்பை நிறுத்தி வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. இதை ஏற்று நீதிமன்றம் தீர்ப்பை அதுவரை நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது.