எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் திமுக பங்கேற்கும்.. ஆனா ஒன்னு.. ஸ்டாலின் போடும் கன்டிஷன்!

Aadmika
Jun 01, 2023,09:40 AM IST
சென்னை : பாட்னாவில் நடக்கும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் திமுக சார்பில் பங்கேற்பேன் என தெரிவித்துள்ள திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின், கூடவே ஒரு கோரிக்கையையும் வைத்துள்ளார். 

2024 ம் ஆண்டு நடக்க உள்ள லோக்சபா தேர்தலில் மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான ஆட்சிக்கு எதிராக பிரம்மாண்ட எதிர்க்கட்சிகள் இணைந்த கூட்டணி உருவாக்குவதற்காக பல்வேறு அரசியல் கட்சிகளும் முயற்சி செய்து வருகின்றன. எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து மெகா கூட்டணி அமைப்பது தொடர்பாக பேச்சுவார்த்தைகள் நடத்த ஜூன் 12 ம் தேதி எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.



இந்த எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் கலந்து கொள்வீர்களா என ஸ்டாலினிடம் கேட்டப்பட்டது. இதற்கு பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் பதிலளித்த அவர், எதிர்க்கட்சிகள் கூட்டம் நடக்கும் அதே நாளில் மேட்டூர் அணை திறப்பு விழாவில் நான் கலந்து கொள்ள உள்ளேன். அது முக்கியமான நிகழ்ச்சி. நான் மட்டுமல்ல காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவும் அன்று வேறு ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளார். அதனால் அவராலும் அந்த கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாது.

அதனால் எதிர்க்கட்சிகள் கூட்டத்தை வேறு ஒரு நாளைக்கு தள்ளி வைக்கும் படி கேட்டுக் கொள்கிறேன். அதே சமயம் எதிர்க்கட்சிகள் நடத்தும் ஆலோசனை கூட்டத்தில் திமுக நிச்சயம் பங்கேற்கும். எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவது தொடர்பாக டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும், பஞ்சாப் முதல்வர் பகவத் மானும் ஜூன் 01 ம் தேதி சென்னையில் என்னை சந்திக்கிறார்கள். பாஜக.,விற்கு எதிராக கூட்டணி அமைப்பது தொடர்பான பேச்சுவார்த்தையை நாங்கள் ஏற்கனவே துவக்கி விட்டோம் என்றார்.

சமீபத்தில் சென்று வந்த சிங்கப்பூர், ஜப்பான் பயணம் பற்றி கேட்டதற்கு, அந்த பயணம் வெற்றிகரமாக முடிந்தது. ஜப்பான் நிறுவனங்களுடன் ரூ.3233 கோடி அளவிற்கு தொழில்துறை ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. தமிழகத்தில் விரைவில் 5000 க்கும் அதிகமான புதிய வேலைவாய்ப்புக்கள் உருவாக்கப்படும். தமிழகத்தை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்வது தொடர்பாக சிங்கப்பூர், ஜப்பான் அமைச்சர்களுடன் பேசினேன். 

ஜனவரி 10,11 ல் நடக்கும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை தமிழகம் நடத்த உள்ளது. அதில் கலந்து கொள்ள வருமாறு ஜப்பான், சிங்கப்பூருக்கு அழைப்பு விடுத்துள்ளேன். அவர்கள் பங்கேற்பார்கள் என நம்புகிறேன் என்றார்.

ஜூன் 12 ம் தேதி நடக்கும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளதாக ஜார்கண்ட் முதல்வரும் ஜார்கண்ட் முக்தி மோட்சா அமைப்பின் தலைவருமான ஹேமந்த் சோரன் ஏற்கனவே உறுதி செய்து விட்டார். தற்போது இந்த கூட்டத்தில் திமுக கலந்து கொள்ள உள்ளதை ஸ்டாலினும் உறுதி செய்துள்ளார்.