எங்களுக்கும் அரசியல் தெரியும்...வீடியோ வெளியிட்டு மத்திய அரசை எச்சரித்த ஸ்டாலின்

Aadmika
Jun 15, 2023,02:37 PM IST
சென்னை : ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியின் கைது தொடர்பாக தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் வீடியோ ஒன்றை பேசி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

அதில் அவர், வழக்கமாக நான் உங்களில் ஒருவன் நிகழ்ச்சி மூலமாக உங்களின் கேள்விகளுக்கு பதில் சொல்லிக் கொண்டிருந்தேன். ஆனால், இந்த வீடியோ மூலம் மற்றொரு முக்கியமான விஷயம் பற்றி பேச போகிறேன். அமலாக்கத்துறை மூலம் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு கொடுக்கப்பட்டு வரும் தொல்லைகள் அனைவருக்கும் தெரியும். இது அப்பட்டமாக அரசியல் பழிவாங்கும் செயல் என்பதில் கொஞ்சமும் சந்தேகம் இல்லை. 10 ஆண்டுகளுக்கு முன் சொல்லப்பட்ட புகாரை அடிப்படையாக வைத்து 18 மணி நேரம் அடைத்து வைத்து, மனஅழுத்தம் கொடுத்து, மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் பலவீனப்படுத்தி, உ யிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் இருதய நோயை உருவாக்கி உள்ளனர் என்றால் இதை விட அப்பட்டமாக அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை இருக்க முடியுமா?



செந்தில் பாலாஜீி மீது குற்றம் உள்ளது என்றால், அதற்கு நீதிமன்ற உத்தரவு இருக்கிறது என்றால் அவரை அழைத்து விசாரிப்பதை நான் தவறு என செல்லவில்லை. ஓடி ஒழியக் கூடிய அளவிற்கு அவர் சாதாரண ஆளும் அல்ல. அவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏ. அதுவும் ஐந்து முறை எம்எல்ஏ.,வாக உள்ளார். இரண்டாவது முறையாக அமைச்சராக உள்ளார். நாள்தோறும் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறவர். அப்படிப்பட்ட ஒருவரை தீவிரவாதியை போல் அடைத்து வைத்து விசாரிக்க என்ன அவசியம் இருக்கு? 

அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க தயார் என்றும், இந்த புகார் தொடர்பான என்ன ஆவணங்கள் எடுத்திருந்தாலும் அது பற்றி விளக்கம் அளிக்கவும் தயார் என சொல்லி இருந்தார். அதற்கு பிறகும் 18 மணி நேரமாக அடைத்து வைத்திருந்தார்கள். யாரையும் சந்திக்க அனுமதியில்லை. இறுதியாக அவரது உடல்நிலை முழுவதுமாக பாதிக்கப்பட்டு, அவருக்கு இருதய வலி அதிகமான பிறகு தான் மருத்துவமனைக்கே அழைத்து சென்றுள்ளனர். அதிலும் அலட்சியம் காட்டி இருந்தால் அது அவருடைய உயிருக்கே ஆபத்தாகி இருக்கும். இப்படி ஒரு விசாரணையை மேற்கொள்கிற அளவிற்கு அப்படி என்ன எமர்ஜென்சி? அறிவிக்கப்படாத எமர்ஜென்சில நாடு இருக்கா?

அப்படித்தான் இருக்கு அமலாக்கத்துறையின் நடவடிக்கை. சிம்பிளா சொல்லனும்னா, பாஜக அரசு அமலாக்கத்துறை மூலம் அவர்களின் அரசியலை சொல்ல நினைக்கிறது. மக்களை சந்தித்து அரசியல் செய்ய பாஜக தயாராக இல்லை. பாஜக.,வை நம்ப மக்களும் தயாராக இல்லை. மக்களுக்கான அரசியலை செய்தால் தான் மக்கள் பாஜகவை நம்புவார்கள். பாஜக.,வின் அரசியலே மக்கள் விரோத அரசியல் தான். கருத்தியல் ரீதியாக, அரசியல் ரீதியாக தேர்தலை எதிர்கொள்ள முடியாதவர்களை வருமான வரித்துறை அமலாக்கத்துறை, சிபிஐ போன்ற விசாரைண அமைப்புக்களை வைத்து மிரட்டுவது பாஜக பாணி. 

இநண்த ஜனநாயக விரோத போக்கை தான் இந்தியா முழுவதும் கடைபிடிக்கிறார்கள். ஒரே விஷயத்தை வேற வேற மாநிலங்களில் வேற வேற மாதிரி டப்பிங் செய்து கொண்டிருக்கிறார்கள். பாஜக ஆளும் மாநிலங்களில் ரெய்டு நடப்பதில்லை. எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் மட்டும் தான் ரெய்டு நடக்கும். இல்லை என்றால் அதிமுக போன்ற அடிமை கட்சிகளை இந்த அமைப்புக்களை காட்டி மிரட்டி பணிய வைத்து விடுகிறார்கள்.அதிமுக, கொத்தடிமையாக்க பாஜக பல ரெய்டுகளை நடத்தியது. ரெய்டு நடத்தினார்களே தவிர எந்த வழக்கையும் நடத்தவில்லை.

ஆட்சியில் இருந்த போது செந்தில் பாலாஜீி மீதான புகார் மீது நடவடிக்கை எடுக்காத பழனிச்சாமிக்கு ஊழல் பற்றி பேச எந்த அருகதையும் கிடையாது. பாஜக நினைக்கிற போல கட்சி இல்லை திமுக. மிரட்டி பணி வைக்க நினைத்தால் பணிய மாட்டோம். நிமிர்ந்து நிற்போம். நாங்க ஆட்சிக்காக கட்சி நடத்தல. கொள்கைக்காக கட்சி நடத்துகிறோம். திமுக.,வையும் திமுக.,காரனையும் சீண்டு பார்க்காதீர்கள். நாங்கள் திருப்பி அடித்தால் தாங்க மாட்டீங்க. எங்களுக்கும் எல்லா அரசியலும் தெரியும். இது மிரட்டல் இல்லை எச்சரிக்கை. இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசி உள்ளார்.