சீமான், திருமுருகன் காந்தியின் ட்விட்டர் கணக்கு முடக்கம்... ஸ்டாலின் கண்டனம்

Aadmika
Jun 01, 2023,11:17 AM IST
சென்னை : நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், மே 17 இயக்க தலைவர் திருமுருகன் காந்தி ஆகியோரின் ட்விட்டர் கணக்குகள் திடீரென முடக்கப்பட்டுள்ளன. இதற்கு தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சயின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் அக்கட்சியை சேர்ந்த பலரும் ட்விட்டர் உள்ள சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகின்றனர். தொடரில் இவர்கள் சமூக வலைதளங்களில் தங்களின் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில் சீமான் உள்ளிட்ட நாம் தமிழர் கட்சியை சேர்ந்த 20 க்கும் அதிகமான நிர்வாகிகளின் ட்விட்டர் கணக்குகளை இந்தியாவில் தற்காலிகமாக தடை செய்வதாக ட்விட்டர் நிறுவனம் அறிவித்துள்ளது.




மத்திய அரசின் அறிவுறுத்தலின் பேரில்சட்டரீதியான கோரிக்கையை ஏற்று, ட்விட்டர் நிறுவனம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. மத்திய அரசு கேட்டுக் கொண்டதாலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ட்விட்டர் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. இதற்கு நாம் தமிழர் கட்சியினர் ஏற்கனவே கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தற்போது தமிழக முதல்வர் ஸ்டாலினும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பதிவிட்டுள்ள ட்வீட்டில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் சகோதரர் திருமுருகன் காந்தி உள்ளிட்டோரது ட்விட்டர் கணக்குகள் இந்தியாவில் முடக்கப்பட்டிப்பது கண்டனத்திற்குரியது. கருத்துக்களை கருத்துக்களால் எதிர்கொள்வதே அறம். கழுத்தை நெரிப்பது அல்ல. ட்விட்டர் முடக்கத்தை விலக்கிச் சமூக வலைத்தளத்தை அதற்கான தரத்துடன் செயல்பட அனுமதி வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.