சந்திர கிரகணம் 2023..ஆண்டின் முதல் சந்திர கிரகணம் இன்று !
May 05, 2023,11:10 AM IST
டில்லி : 2023 ம் ஆண்டின் முதல் சந்திர கிரகணம் இன்று (மே 05) நிகழ உள்ளது. இன்று இரவு நடைபெற உள்ள சந்திர கிரகணம் பெனும்பிரல் சந்திர கிரகணம் ஆகும்.
சூரியன், பூமி, சந்திரன் இவை மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் வரும் வானியல் நிகழ்வை கிரகணம் என்கிறோம். இது போன்ற நிகழ்வு வருடத்திற்கு மூன்று அல்லது நான்கு முறை நிகழும். இதில் சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே பூமி வரும் போது, பூமியின் நிழல் சந்திரனின் மீது விழும். அப்போது சந்திரன், அடர் சிவப்பு நிறத்தில் காட்சி தரும். இதற்கு சந்திர கிரகணம் என்று பெயர். பொதுவாக சந்திர கிரகணம், பெளர்ணமி நாளிலும், சூரிய கிரகணம் அமாவாசை நாளிலும் ஏற்படும்.
சந்திர கிரகணமானது முழு சந்திர கிரகணம், பகுதி நேர சந்திர கிரகணம், பெனும்பிரல் சந்திர கிரகணம் என மூன்று வகைப்படும். சந்திரனும் சூரியனும் பூமியின் எதிரெதிர் பக்கங்களில் இருக்கும் பொழுது நிகழ்வது முழு சந்திர கிரகணம் ஆகும். பூமியின் நிழல் சந்திரனின் ஒரு பகுதியை மட்டும் மறைப்பதற்கு பகுதி நேர சந்திர கிரகணம் என்றும், பூமியின் புற நிழல் வழியாக சந்திரனின் ஒரு பகுதி கடந்து செல்லும் நிகழ்விற்கு பெனும்பிரல் சந்திர கிரகணம் என்றும் பெயர்.
பெனுபிரல் சந்திர கிரகணத்தின் போது சந்திரன் வழக்கமான பெளர்ணமியை போல் ஒளி வீசாமல், இருண்டதாக காணப்படும். இன்று இரவு 08.44 மணிக்கு துவங்கி நள்ளிரவு 01.01 மணி வரை சந்திர கிரகணம் நீடிக்க உள்ளது. இரவு 10 மணி 52 நிமிடம் 59 விநாடிகளை கிரகணத்தின் உச்சநேரமாக சொல்கிறார்கள்.