முடிவு எடுத்தாச்சு.. குமாரசாமி கட்சியின் அறிவிப்பால் உச்சகட்ட பரபரப்பில் கர்நாடகா!
May 12, 2023,12:56 PM IST
பெங்களுரு : கர்நாடகாவில் புதிய அரசு அமைவதற்கு யாருடன் கூட்டணி சேர போகிறோம் என்பது பற்றி முடிவு எடுத்து விட்டோம் என குமாரசாமியின் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி அறிவித்துள்ளது. இதனால் கர்நாடக அரசியல் கட்சிகள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவே பரபரப்பாக கர்நாடக அரசியல் நிலவரத்தை கவனிக்க துவங்கி உள்ளது.
கர்நாடக சட்டசபை தேர்தல் மே 10 ம் தேதி நடந்து முடிந்தது. இதில் பதிவான ஓட்டுக்கள் மே 13 ம் தேதி எண்ணப்பட்டு, அன்றைய தினம் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஆனால் இதுவரை வெளியிடப்பட்ட தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் பெரும்பாலான கருத்துக்கணிப்புக்கள் கர்நாடகாவில் தொங்கு சட்டசபையே அமையும். யார் ஆட்சி அமைக்க வேண்டும் என முடிவு செய்யும் கிங் மேக்கராக குமாரசாமி இருப்பார் என தெரிவித்துள்ளன.
இதனால் காங்கிரசும், பாஜக.,வும் போட்டி போட்டு��் கொண்டு தங்களுக்கு ஆதரவு அளித்து, கூட்டணி அமைக்கும் படி குமாரசாமி கட்சிக்கு துண்டு போட்டு வைத்துள்ளன. ஆனால் குமாரசாமி தற்போது இந்தியாவில் இல்லை. சிங்கப்பூர் புறப்பட்டு சென்றுள்ளார். இந்நிலையில் குமாரசாமி கட்சியை சேர்ந்த மூத்த தலைவரான தன்வீர் அகமது, யாருடன் கூட்டணி அமைப்பது என முடிவு எடுத்தாச்சு என அறிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர், இரண்டு தேசிய கட்சிகளும் எங்களை அணுகி ஆதரவு கேட்டுள்ளன. யாருடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க துணை நிற்பது என்பது பற்றி முடிவு எடுத்தாகி விட்டது. சரியான நேரம் வரும் போது வெளிப்படையாக அறிப்போம் என தெரிவித்துள்ளார்.
ஆனால் ஆட்சி அமைக்க ஆதரவு கேட்டதாக மதசார்பற்ற ஜனதா தளம் கூறி உள்ள தகவலை பாஜக மறுத்துள்ளது. தனி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று, ஆட்சி அமைப்போம் என நம்பிக்கை உள்ளதாக தெரிவித்துள்ளது. பாஜக, மதசார்பற்ற ஜனதாதளத்தை தொடர்பு கொள்ளவில்லை என பாஜக திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
மேலும், 120 இடங்களில் கண்டிப்பாக வெற்றி பெறுவோம். இது வரை கிடைத்த கள நிலவர தகவலின்படி 120 சீட்களை நாங்கள் கைப்பற்றுவோம் என பாஜகவின் சோபா கரந்தலாஜே தெரிவித்துள்ளார். அதே சமயம் இரண்டு தேசிய கட்சிகளும் தங்களை தொடர்பு கொண்டு ஆதரவு கேட்டதாக மதசார்பற்ற ஜனதா தளமும் உறுதியாக கூறி வருகிறது.