கிருத்திகையில் முருகனை இப்படி வழிபட்டால் சகல விதமான செல்வங்களும் சேரும்

Aadmika
Jul 13, 2023,10:53 AM IST

தமிழ் கடவுளான முருகப் பெருமானின் அருளை பெறுவதற்கு சஷ்டியை போல் கிருத்திகையும் மிக சிறப்பான நாளாகும். திதியில் சஷ்டி, நட்சத்திரத்தில் கிருத்திகை, கிழமையில் செவ்வாய், மாதங்களில் கார்த்திகை மிகவும் உகந்தவையாகும். விரதமிருந்து வேலவனை வழிபட்டால் தீராத வினையெல்லாம் தீரும் என்பது ஆன்றோர் வாக்கு.


கார்த்திகை பெண்களால் வளர்க்கப்பட்டவர் முருகன் என்பதனால் மாதங்களில் கார்த்திகை மாதமும், நட்சத்திரங்களில் கிருத்திகை குல்ல கார்த்திகை நட்சத்திரம் முருகனுக்கு உரியவையாகிற்கு. குழந்தை பேறு வேண்டுபவர்கள் மட்டுமல்ல, திருமண தடை உள்ளவர்கள், கிரக தோஷங்களால் பாதிக்கப்பட்டவர்கள், கடன் பிரச்சனை, எதிரிகள் தொல்லை, பூமி சம்பந்தமான பிரச்சனையில் இருப்பவர்கள், கணவன் - மனைவி பிரச்சனைகள் இருப்பவர்களும் கிருத்திகையில் விரதமிருந்து முருகப் பெருமானை வழிபடலாம்.


மாதந்தோறும் வரும் கிருத்திகை நட்சத்திர நாளில் அதிகாலையில் எழுந்து, நீராடி, முழு உபவாசமாக விரதம் இருப்பது சிறப்பானது. அன்றைய தினம் கந்தசஷ்டி கவசம், கந்தகுரு கவசம், கந்தபுராணம், கந்தர் கலிவெண்பா, சண்முக கவசம், முருகன் மந்திரங்கள் ஆகியவற்றை சொல்லி முருகனை வழிபட வேண்டும். இந்த நாளில் முருகன் அவதார கதையை கேட்டாலும், படித்தாலும் முருகனின் பரிபூரண அருள் கிடைக்கும்.


முழுவதுமாக உபவாசம் இருக்க முடியாதவர்கள் பால், பழம் மட்டும் சாப்பிட்டு விரதம் இருக்கலாம். உணவாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்றால் உப்பு சேர்க்காமல் உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். இது மிக உயர்வான விரதமாக கருதப்படுகிறது. முருகனுக்கு கேசரி, சர்க்கரை பொங்கல் போன்றவை நைவேத்தியமாக படைத்து, செவ்வரளி, செம்பருத்தி போன்ற சிவப்பு நிற மலர்கள் சூட்டி வழிபட வேண்டும்.


அருகில் இருக்கும் முருகன் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்யலாம். கிருத்திகையில் துவங்கி, பரணி நட்சத்திரத்தில் விரதத்தை நிறைவு செய்ய வேண்டும். கோவில்களில் முருகனுக்கு நடக்கும் அபிஷேகத்திற்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொடுக்கலாம். தொடர்ந்து 12 ஆண்டுகள் கிருத்திகை விரதம் இருந்தால் 16 வகை செல்வங்களும் கிடைக்கும். தொட்டதெல்லாம் பொன்னாகும் என்பது ஐதீகம்.