முழுப் பதவிக்காலத்தையும் முடித்த 3வது "முதல்வர்" சித்தராமையா...!

Aadmika
May 18, 2023,09:54 AM IST

பெங்களுரு : கர்நாடகாவில் முதல்வர் பதவியை முழுசாக முடித்தவர்கள் 3 பேர்தான். அந்த மூவரில் ஒருவர்தான் சித்தராமையா.


கர்நாடகவில் சித்தராமைய்யாவிற்கு முதல்வர் பதவியையும், சிவக்குமாருக்கு துணை முதல்வர் பதவியையும் வழங்க காங்கிரஸ் தலைமை முடிவு செய்திருக்கிறது. இதனால் கடந்த நான்கு நாட்களாக நீடித்து வந்த அரசியல் குழப்பம் கர்நாடகாவிலும், காங்கிரசிலும் முடிவுக்கு வந்துள்ளது.




இன்று மாலை நடக்க உள்ள காங்கிரஸ் எம்எல்ஏ.,க்கள் கூட்டத்தில் இதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளதாகவும், வரும் சனிக்கிழமை - அதாவது மே 20 ம் தேதி புதிய அமைச்சரவை பதவியேற்ற உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. 


முதல்வராகப் பதவியேற்கவுள்ள சித்தராமையா மிகவும் அனுபவம் வாய்ந்த தலைவர். பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் மத்தியில் செல்வாக்கு உள்ளவர். ஜே. எச் படேல், தரம்சிங் அமைச்சரவையில் துணை முதல்வர் பதவியை வகித்துள்ளார். மாநில அமைச்சராக நிதித்துறை,  போக்குவரத்து, உயர் கல்வித்துறை உள்ளிட்ட பல முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார்.


சுயேச்சை எம்எல்ஏவாக இவரது அரசியல் வாழ்க்கை சாமுண்டேஸ்வரி தொகுதியிலிருந்து தொடங்கியது. அந்தத் தொகுதியிலேயே பல முறை இவர் தேர்ந்தெடுக்கப்பட்டு வந்தார். சாமுண்டேஸ்வரி, வருணா, பதாமி ஆகிய 3 தொகுதிகளிலிருந்து இதுவரை 12 முறை சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஜனதாக் கட்சி, ஜனதாதளம் என பயணித்த சித்தராமையா 2006ம் ஆண்டு முதல் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார்.


2013ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 122 தொகுதிகளில் வெற்றி பெற்று தனி மெஜாரிட்டியுடன் ஆட்சியில் அமர்ந்தது. சித்தராமையா முதல்வராக பொறுப்பேற்றார். அவர் முதல்வராக பதவியேற்றது அதுவே முதல் முறையாகும். தனது முழுப் பதவிக்காலத்தையும் முதல்வராகப் பூர்த்தி செய்தார் சித்தராமையா. கர்நாடகாவில் ஒரு முதல்வர் தனது பதவிக்காலத்தை முழுமையாக முடிப்பது என்பது அபூர்வமாகும். 


மாநில மறு சீரமைப்புக்குப் பிறகு கர்நாடகா உருவான பின்னர் முதல்வர் பதவியை முழுமையாக 5 ஆண்டு காலம் வகித்தவர்கள் 3 பேர்தான். தேவராஜ் அர்ஸ், ராமகிருஷ்ண ஹெக்டே மற்றும் சித்தராமையா ஆகியோரே அவர்கள். அந்த வரிசையில் கர்நாடக முதல்வராக சாதனை பட்டியலிலும் இடம் பெற்றுள்ளார் சித்தராமையா. தற்போது 2வது முறையாக முதல்வராகவுள்ள அவர் தனது பதவிக்காலத்தை முழுமையாக முடிப்பாரா அல்லது பாதியிலேயே டி.கே.சிவக்குமாருக்கு விட்டுக் கொடுப்பாரா என்பது கேள்விக்குரிய ஒன்றாக மாறியுள்ளது.


கட்சியில் மாற்றம் வருமா?


கர்நாடகா அரசியல் குழப்பத்திற்கு முடிவு கொண்டு வந்தது மட்டுமல்ல, கட்சியிலும் பல மாற்றங்களை செய்ய காங்கிரஸ் கட்சி முடிவு செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருக்கும் மல்லிகார்ஜூன கார்கேவை மாற்றி விட்டு, ராஜஸ்தான் முதல்வராக இருக்கும் அசோக் கெலாட்டை கட்சித் தலைவராக நியமிக்க ராகுல் காந்தி ஆலோசனை கூறியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.