ஆட்டிசம் பாதித்த குழந்தைகளுக்கு உதவுவது.. இறைவனுக்கு செய்யும் தொண்டு!

Su.tha Arivalagan
Mar 15, 2023,12:37 PM IST

சென்னை: மகனுக்கு வந்த ஆட்டிசம் பாதிப்பால் தங்களது வாழ்க்கை நாசமாகி விட்டதாக சோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு கூறியுள்ள நிலையில் ஆட்டிசம் பாதித்த குழந்தைகளுக்காக பாடுபட்டு வரும் ஒரு தம்பதி குறித்த விவரத்தைப் பகிர்ந்துள்ளார் திமுகவைச் சேர்ந்தவரும்,அயலக தமிழர் நல வாரியத்தின் தலைவருமான கார்த்திகேய சிவசேனாபதி.


இதுகுறித்து அவர் போட்டுள்ள பதிவு:


ஆட்டிசம்  - டவுன் சிண்ட்ரோம் , உள்ளிட்ட மாற்று திறனுடன் வளரும் குழந்தைகள்,  நிலைகளை விவரிக்க வார்த்தைகள் இல்லை, அவர்களை பராமரிப்பதற்காகவே தனிப் பள்ளியை நடத்தி  வருகிறார் கவின்.

அர்ப்பணிப்பு உணர்வும் சகிப்புத்தன்மையும் மனம் முழுவதும் பாசத்தையும் அன்பையும் ஒரு சேர அக் குழந்தைகளின்பால் செலுத்தி வளர்ப்பதென்பது ஆகச்சிறந்த மனிதநேயம் மட்டுமல்ல இறைவனுக்கு நேரடியாக செய்யும் தொண்டு.



பொருளாதார பின்புலம் பெரிய அளவு இல்லாத குடும்பங்களில் இது போன்ற குழந்தைகளின் நிலையை விவரிக்க வார்த்தைகளே இல்லை. அந்த குழந்தைகளும் இந்தச் சமூகத்தில் சக  மனிதர்கள் வாழும்  இயல்பு வாழக்கையை வாழ வேண்டும், எந்த நிலையிலும் அவர்கள் பரிதாபத்திற்கு உரியவர்களாக  பார்க்கப்படக்கூடாது.


பெற்றோரின் காலத்திற்குப் பிறகு அவர்களின் வாழ்க்கை  கேள்விக்குறியாகிவிடக்கூடாது என்ற நிலையை முற்றிலும் உணர்ந்ததால், சாய் கிருபா என்ற முன் மாதிரிப் பள்ளியை மாற்றுத்திறன் குழந்தைகளுக்காகவே உருவாக்கி, அவர்களுக்கு பல்வேறு பயிற்சிகளை கொடுத்து, தங்களது வேலைகளை தாங்களே செய்துகொள்ளவும் தங்களது வாழ்வாதாரத்திற்கு  தாங்களே பொருள் ஈட்டும் வழிமுறைகளை கற்று கொடுப்பது உள்ளிட்ட பல்வேறு வழிகளில் அந்த குழந்தைகள் சமூகத்தில் நல்ல நிலைக்கு உயர்த்த ஏறத்தாழ 40 பேர் உள்ளடக்கிய ஒரு குழுவுடன் செயல்பட்டு வருகிறார் பள்ளியின் இயக்குனர் கவின் திருமுருகன். 



அரிதான இந்த மானுட பிறப்பின் பயன் சக மனிதர்களின் வாழ்க்கையை உயர்த்த பயன்படவேண்டும் என்ற சிந்தனையில் செயல்படும் கவின் திரு முருகன் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகள். திருப்பூரிலே சாய் கிருபா பள்ளிக்கு அவர்களின் விளையாட்டு தின விழாவிற்குத் 2018 ஆம் ஆண்டு தலைமை ஏற்றுச்சென்று இருந்தேன்.  மாற்றுத் திறனாளிகளுக்காக செயல்படும் இந்தச் சிறப்பான பள்ளி சுமார் 200 குழந்தைகளைக் கொண்டது. 


இந்தப் பள்ளியை நடத்தி வரும் மருத்துவர் திரு முருகன் மற்றும் கவின் திரு முருகன் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.  அந்த குழந்தைகளுக்கு தற்சார்பு வாழ்வியலைக் கற்று கொடுக்கும் ஒரு சீரிய முயற்சியின் விதையே இந்த சாய் கிருபாபள்ளி. 


குழந்தைகள் இயற்கை விவசாயம் செய்தல், காய் கனிகளை பயிர் செய்தல்,  உணவகம் நடத்துவது, பலகாரங்கள்  செய்வது அவர்கள் பள்ளியிலேயே ஒரு மளிகைக் கடை நடத்தி விற்று வருகிறார்கள். அவர்களே தொழில் முனைவோராய் மாறியும் வருகின்றனர். அவர்களின் தற்சார்பு வாழ்வியலுக்கு இந்தப் பயிற்சிகள்  ஊக்கத்தை வித்திடும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை என்று அவர் கூறியுள்ளார்.