கர்நாடகத்தில் விழுந்த அடி.. 4 மாநிலத் தேர்தலை சூதானமாக கையாள பாஜக முடிவு!

Su.tha Arivalagan
May 16, 2023,12:09 PM IST
டெல்லி: கர்நாடக சட்டசபைத் தேர்தலில் கிடைத்த மிகப் பெரிய தோல்வியைத் தொடர்ந்து எதிர் வரும் நான்கு மாநில சட்டசபைத் தேர்தலில் மிகவும் கவனமாக நடக்க பாஜக தீர்மானித்துள்ளது.

கர்நாடக சட்டசபைத் தேர்தல் முடிவுக்கு வந்துள்ள நிலையில், அடுத்து நான்கு முக்கியமான மாநிலங்களுக்கு சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா மற்றும் சட்டிஸ்கர் ஆகியவை அவை. இதில் மத்தியப் பிரதேசத்தில் மட்டும்தான் தற்போது பாஜக ஆட்சி நடந்து வருகிறது. ராஜஸ்தான், சட்டிஸ்கரில் காங்கிரஸும், தெலங்கானாவில் தெலங்கானா ராஷ்டிரிய ஜனதாதளும் ஆட்சியில் உள்ளன.

இதில் மத்தியப் பிரதேசத்தில் பாஜக வென்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இங்கு அக்கட்சிக்கு தோல்வி கிடைத்தால் அது வட இந்தியாவில்  அக்கட்சிக்கு எதிராக பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் பாஜக இப்போதே சுதாரிக்க ஆரம்பித்து விட்டது. வழக்கமான பாணி பிரச்சாரத்தை மேற்கொள்ளாமல் தனது உத்திகளை மாற்றியமைக்கவும் பாஜக திட்டமிட்டுள்ளதாம்.



தெலங்கானாவைப் பொறுத்தவரை பாஜக அங்கு வெல்வது கடினம். ராஜஸ்தானில் அரசுக்கு எதிரான கோப அலை மக்கள் மத்தியில் காணப்படுகிறது. அதை காங்கிரஸ் சரி செய்ய முயலாவிட்டால் நிச்சயம் அக்கட்சிக்கு கஷ்டமாகி விடும். மறுபக்கம் சச்சின் பைலட் வேறு உள்ளடி வேலைகளைத் தொடர்ந்து செய்து வருகிறார். எனவே அவரும் கெத்து காட்ட முயற்சிப்பார். எனவே காங்கிரஸுக்கு அங்கு சவால்கள் காத்துள்ளன.

சட்டிஸ்கரைப் பொறுத்தவரை காங்கிரஸுக்கு பெரிதாக சிரமம் இருக்காது என்றே சொல்லப்படுகிறது. ஆனால் அந்த மாநிலத்தை தட்டிப் பறிக்க பாஜக நிச்சயம் முயலும் என்பதால் காங்கிரஸ் கவனமாக இருப்பது அக்கட்சிக்கும், ஆட்சிக்கும் நல்லது.

மறுபக்கம் பாஜக நான்கு மாநிலத் தேர்தலில் வெற்றியைக் குவிக்கும் முனைப்புடன் இப்போதே உத்திகளை வகுக்க ஆரம்பித்து விட்டது. இதில் வேட்பாளர் தேர்வு முதல் அனைத்து நிலைகளிலும் மிகுந்த கவனத்துடன் செயல்பட அக்கட்சி தீர்மானித்துள்ளது. கர்நாடகத்தில் அக்கட்சி செய்த தவறுகளை இந்த நான்கு மாநிலத் தேர்தலில் செய்யாமல் தவிர்க்கவும் அது உறுதியாக உள்ளது.

கர்நாடகத்தைப் பொறுத்தவரை பாஜக செய்த மிகப் பெரிய தவறு, லிங்காயத்து சமுதாயத்தினர் மத்தியில் மிகப் பெரிய தலைவராக விளங்கி வரும் எதியூரப்பாவை முதல்வர் பதவியிலிருந்து வெளியேற்றியதுதான். அது லிங்காயத்துகளிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி விட்டது.  அடுத்த தவறு, லிங்காயத்து பிரதிநிதியாக இருந்து வந்த ஜெகதீஷ்ஷெட்டர், லட்சுமண் சடாவி ஆகியோருக்கு டிக்கெட் தராமல் அவர்களை அவமதித்தது. இதுவும் லிங்காயத்துகளை கடும் கோபத்தில் ஆழ்த்தி விட்டது.

அதேபோல மதச்சார்பற்ற ஜனதாதளம் போன்ற கட்சிகளுடன் பாஜக கூட்டணி வைத்திருக்கலாம். அப்படி செய்திருந்தால் நிச்சயம் காங்கிரஸுக்கு கஷ்டமாகியிருக்கும் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். இப்படி பல்வேறு தவறுகளை பாஜக செய்ததால்தான் கர்நாடகம் அதன் கையை விட்டு போய் விட்டது.

இந்த தவறுகளை நான்கு ம���நிலத் தேர்தலில் தவிர்க்க பாஜக தீவிரமாக உள்ளது. முக்கியமான சிறு கட்சிகளுடன் கூட்டணி அமைக்கவும், உள்ளூர்த் தலைவர்களை அதிக அளவில் ஊக்கம் கொடுத்து அவர்களை முன்னிறுத்தி தேர்தலை சந்திக்கவும் பாஜக திட்டமிட்டுள்ளது. உள்ளூர்த் தலைவர்கள் வலுவாக இல்லாவிட்டால் வெற்றி கஷ்டம் என்பதையும் கர்நாடகம்தான் பாஜகவுக்குக் கற்றுக் கொடுத்துள்ளது. உள்ளூர்த் தலைவர்களிடமே முக்கியப் பொறுப்புகளை ஒப்படைக்கவும் பாஜக தீர்மானித்துள்ளது.

மத்தியப் பிரதேசத்தைப் பொறுத்தவரை முதல்வர் சிவராஜ் சிங் செளகான்தான் மீண்டும் முதல்வராக்கப்படுவார் என்று தெரிகிறது. அதேசமயம், ஜோதிராதித்ய சிந்தியா,  நரேந்திர சிங் டோமர், பிடி சர்மா ஆகிய பிற முக்கியத் தலைவர்களுடன் இணைந்து செயல்படுமாறு செளகான் உத்தரவிடப்படுவார். 

ராஜஸ்தானில் முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியாவுக்கு முக்கியத்துவம் தரப்படும். அவர் கிரோரி லால் மீனா, கஜேந்திர சிங் ஷெகாவத், சதீஷ் பூனியா உள்ளிட்டோருடன் இணைந்து செயல்பட வேண்டும். கோஷ்டிப் பூசலே இருக்கக் கூடாது என்பதே இவர்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ளத முக்கிய உத்தரவாகும்.

இப்படி ஒவ்வொரு மாநிலத்துக்கும் தனித் தனியாக திட்டங்கள் வகுத்து செயல்பட பாஜக தீர்மானித்துள்ளது. வழக்கமாக மத்திய தலைமையிலிருந்துதான் எல்லாத் திட்டங்களும், உத்தரவுகளும் வரும். ஆனால் கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர்களே அத்தனை வேலைகளையும் செய்ததையும், அவர்களது பணிகளில் கட்சித்தலைமை குறுக்கிடாமல் அமைதியாக இருந்ததையும் பார்த்து விட்ட பாஜக தற்போது அதே பாணியை நான்கு மாநிலத் தேர்தலில் பின்பற்றவுள்ளது.