என்னடா இது...தேர்தல் முடியறதுக்கு முன்னால கட்சியே காலியாகிடும் போல...

Aadmika
Apr 13, 2023,04:06 PM IST
பெங்களுரு : கர்நாடகாவில் சட்டசபை தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியானதில் இருந்தே பாஜக.,வில் பல குழப்பங்கள் நடந்து வருகிறது. அதிலும் வேட்பாளர் பட்டியல் வெளியாக வெளியாக கட்சியில் இருந்து பலரும் ராஜினாமா செய்து வருகின்றனர்.

கர்நாடக சட்டசபை தேர்தல் மே 10 ம் தேதி நடைபெற உள்ளதாக தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. 224 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட உள்ளது. சட்டசபை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கலும் இன்று துவங்கி நடைபெற்று வருகிறது. பாஜக சார்பில் இதுவரை இரண்டு வேட்பாளர் பட்டியல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இவற்றில் புதியவர்களுக்கே அதிகம் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனால் கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் அதிருப்தி அடைந்துள்ளனர்.



தங்களுக்கு தேர்தலில் போட்டியிட சீட் வழங்காத அதிருப்தியில் பலரும் கட்சியில் இருந்து விலகி வருகின்றனர். ஈஸ்வரப்பா, அரசியலில் இருந்தே விலகுவதாக அறிவித்ததற்கும் இது தான் காரணம் என சொல்லப்படுகிறது. கட்சியில் பலரும் எடியூரப்பாவிற்கு எதிராக இருக்கையில், கட்சி மேலிடமோ எடியூரப்பாவிற்கு வேண்டியவர்கள் பலருக்கும் தேர்தலில் போட்டியிட சீட் கொடுத்ததும் கர்நாடக பாஜக.,வில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. 

தற்போது கர்நாடக முன்னாள் துணை முதல்வர் லட்சுமண சாவடியே விலகி உள்ளார்.  தான் சுயமரியாதையுடன் வாழும் அரசியல்வாதி என்றும், யாரிடமும் சென்று யாசகம் கேட்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஆனால் அவருக்கு தேவையான அனைத்தையும் கட்சி செய்திருப்பதாக எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியில் நாளை புதிதாக பலரும் சேர உள்ளதாக அக்கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்வருமான குமாரசாமி தெரிவித்துள்ளார். இதனால் லட்சுமண சாவடி, மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியில் சேர உள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. 

போகிற போக்கை பார்த்தால் கர்நாடக தேர்தல் முடிவதற்குள் கர்நாடகாவில் பாஜக கட்சியே மொத்தமாக காலியாகி விடும் போல. இன்னும் எத்தனை பேர் கட்சியில் இருந்து கிளம்ப போகிறார்களோ என நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.