கர்நாடக சட்டசபை தேர்தலில் வெற்றி யாருக்கு?.. கருத்துக் கணிப்புகள் சொல்வது என்ன?
பெங்களூரு : கர்நாடக சட்டசபைத் தேர்தல் தொடர்பான கருத்துக் கணிப்புகளில் தொடர்ந்து காங்கிரஸுக்கு சாதகமான முடிவுகளே வந்து கொண்டுள்ளன.
கர்நாடக சட்டசபை தேர்தல் 2023 தேர்தல் மே 10 ம் தேதி நடக்க உள்ளது. அடுத்து வரும் ஆண்டுகளில் தென் மாநிலங்களின் தலையெழுத்தை நிர்ணயிக்க போகும் தேர்தலாகவே இது பார்க்கப்படுகிறது. ஆளும் பாஜக மீண்டும் ஆட்சியை தக்க வைக்குமா ? அல்லது 1999 ம் ஆண்டுக்கு பிறகு தற்போது மீண்டும் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்குமா? என நாடே எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.
கர்நாடகாவில் உள்ள 224 சட்டசபை உறுப்பினர்களின் பதவிக்காலம் மே 24 ம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. கர்நாடகாவில் அடுத்து ஆட்சி அமைக்க போவது யார் என்பதை முடிவு செய்யும் தேர்தல் மே 10 ம் தேதி நடைபெற உள்ளது. கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான பிரச்சாரம் மே 08 ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதனால் இறுதி கட்ட பிரச்சாரத்தில் பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் பங்கேற்று வருவதால் அனல் பறந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில் ஆட்சியை கைப்பற்ற போவது யார் என்பதற்கான தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புக்கள் தற்போது வெளியாகி உள்ளன. இதில் மூன்று கருத்துக் கணிப்புக்கள் கர்நாடகாவில் தனிப் பெரும்பான்மையுடன் காங்கிரஸ் கட்சி ஆட்சியை கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம், ஜீ நியூஸ் கருத்துக் கணிப்பு மட்டும் கர்நாடகாவில் பாஜக தான் வெற்றி பெற்று, தனி பெரும் கட்சியாக இருக்கும் என தெரிவித்துள்ளது.
இந்துஸ்தான் டைம்ஸ், ஏபிபி - சி ஓட்டர் கருத்துக் கணிப்பு :
கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும். பாஜக மிகப் பெரிய தோல்வியை சந்திக்கும். ஜனதா தளம் குறைந்த அளவிலான ஓட்டுக்களை மட்டுமே பெறும். 224 தொகுதிகளில் காங்கிரஸ் 107 முதல் 119 இடங்களை கைப்பற்றும். பாஜக 74 முதல் 86 இடங்களையும். மதசார்பற்ற ஜனதா தளம் 23 முதல் 35 இடங்களையும் கைப்பற்றும்.
இந்தியா டுடே - சி ஓட்டர் கருத்து கணிப்பு :
கர்நாடக தேர்தலில் பாஜக தோல்வியை சந்திக்கும். தற்போது ஆளும் பாஜக கட்சி 74 முதல் 86 இடங்களை மட்டுமே பிடிக்கும். இது 2018 தேர்தலை விட 24 இடங்கள் குறைவாகும். கர்நாடகாவின் அடுத்த முதல்வர் யார் என்ற கேள்விக்கு 42 சதவீதம் பேர் காங்கிரஸ் தலைவர் சித்தராமையாவிற்கும், 31 சதவீதம் பேர் தற்போதைய முதல்வர் பசராஜ் பொம்மைக்கும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
கன்னட அவுட்லெட் எடினா கருத்து கணிப்பு :
காங்கிரஸ் கட்சி 140 இடங்களில் அதிக ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெறும். பாஜக 57 முதல் 65 இடங்களை பிடிக்கும். 33 சதவீதம் ஓட்டுக்களை கைப்பற்றும்.
ஜீ நியூஸ்- மேட்ரிஸ், கன்னட செய்தி சேனல் சுவர்ணா கருத்து கணிப்பு :
கர்நாடக தேர்தலில் பாஜக தனிப் பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியை கைப்பற்றும். பொம்மை அதிக ஓட்டு வித்தியாசத்தில் தொடர்ந்து நான்காவது முறையாக சட்டசபை தேர்தலில் தனது தொகுதியில் வெற்றி பெறுவார்