கர்நாடகா அமைச்சரவை.. தினேஷ் குண்டுராவ் உள்பட 24 பேர் அமைச்சரானார்கள்!

Aadmika
May 27, 2023,03:52 PM IST
பெங்களுரு : கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சி பொறுப்பேற்ற ஒரு வாரத்திலேயே அமைச்சரவை விரிவாக்கம் நடைபெற்றுள்ளது. புதிதாக 24 எம்எல்ஏக்கள் அமைச்சர்களாகப் பதவியேற்றுள்ளனர்.

சமீபத்தில் நடந்து முடிந்த கர்நாடக சட்டசபை தேர்தலில் அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது காங்கிரஸ் கட்சி. முதல்வராக சித்தராமைய்யாவும், துணை முதல்வராக டி.கே.சிவக்குமாரும் மே 20 ம் தேதி பதவியேற்றுக் கொண்டனர். அவர்களுடன் 10 பேர் கொண்ட அமைச்சரவையும் பொறுப்பேற்றுக் கொண்டது. இந்நிலையில் இன்று மேலும் 24 எல்எல்ஏ.,க்கள் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதனால் கர்நாடக அமைச்சரவையில் இடம்பெறும் அமைச்சர்களின் எண்ணிக்கை 34 ஆக அதிகரித்துள்ளது. 



காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் பலருக்கும் அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இன்று பிற்பகலில் புதிய அமைச்சர்கள் பதவியேற்க உள்ளனர். அதோடு சிவக்குமாருக்கு நெருக்கமான லட்சுமி ஹெபல்கர், மது பங்காரப்பா, டி.சுதாகர், செலுவராய சாமி, எம்.சி.சுதாகர் ஆகியோருக்கும் அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது. 

24 அமைச்சர்கள் விவரம்:

எச்.கே. பாட்டீல், கிருஷ்ண பைரேகவுடா, செலுவராயசாமி, கே. வெங்கடேஷ், எச்.சி. மகாதேவப்பா, ஈஸ்வர் காந்த்ரே, தினேஷ் குண்டுராவ், கைத்தசந்திரா ராஜண்ணா, சரணபசப்பா தர்ஷனாபூர், சிவானந்த் பாட்டீல், ராமப்பா பாலப்பா திம்மாபூர், எஸ்.எஸ்.மல்லிகார்ஜூன், சிவராஜ் சங்கப்பா தங்கடாகி, சரணபிரகாஷ் ருத்ரப்பா பாட்டீல், மங்கள் வைத்யா, லட்சுமி ஹெப்பல்கர், ரஹீம் கான், சுதாகர், சந்தோஷ் லேட், போஸ்ராஜு, சுரேஷா, மது பங்காரப்பா, எம்.சி.சுதாகர், பி.நாகேந்திரா.

காங்கிரஸ் புதிதாக வெளியிட்டுள்ள அமைச்சரவை பட்டியலில் 6 பேர் லிங்காயத்தை சமூகத்தையும், 4 பேர் ஒக்கலிகா சமூகத்தையும் சேர்ந்தவர்கள் இடம்பெற்றுள்ளனர். இது தவிர குருபா, ராஜூ, மராதா, எடிகா மொகவீரா உள்ளிட்ட தாழ்த்தப்பட்ட, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட இடத்தை சேர்ந்தவர்களுக்கும் அமைச்சரவையில் இடம் வழங்கப்பட்டுள்ளது. சாதி, இன பிரச்சனை வந்து விடக் கூடாது என்பதற்காக மிக கவனமாக அமைச்சர்களை தேர்வு செய்துள்ளார் சித்தராமைய்யா.

முதல்வர் சித்தராமையாவுக்கு முக்கியமான நிதித்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் நீர்வளத்துறை அமைச்சராகியுள்ளார்.  தினேஷ் குண்டுராவ் சுகாதாரத் துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்.