கோயம்புத்தூர் டிரைவர் ஷர்மிளாவுக்கு கார் பரிசு.. அசத்திய கமல்ஹாசன்

Su.tha Arivalagan
Jun 26, 2023,01:11 PM IST


சென்னை: கோயம்புத்தூரின் முதல் பெண் பஸ் டிரைவர் என்ற பெருமையுடன் வலம் வந்து சமீபத்தில் தனது வேலையை உதறிய ஷர்மிளாவுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் கார் ஒன்றைப் பரிசாக அளித்து அசத்தியுள்ளார்.


கோவையின் முதல் பெண் பஸ் டிரைவர் என்ற பெருமைக்குரியவர் ஷர்மிளா. தனியார் பஸ் ஒன்றில் டிரைவராக இருந்து வந்தார். அவர் டிரைவரானது முதல் சமூக வலைதளங்களில் தொடர்ந்து பேசப்பட்டு வந்தார். பலரும் அவரைச் சந்தித்துப் பாராட்டினர்.




கோவை தெற்குத் தொகுதி பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசனும் கூட அவரை நேரில் பார்த்து பஸ்சிலும் பயணித்து பாராட்டினார். அதேபோல சமீபத்தில் திமுகவைச் சேர்ந்த ராஜ்யசபா எம்.பி. கனிமொழியும் ஷர்மிளாவை நேரில் பார்த்துப் பாராட்டி அவர் ஓட்டிய பஸ்ஸிலும் பயணம் செய்தார்.


இந்த விவகாரம் மட்டும் திடீரென பரபரப்பாகி விட்டது. சர்ச்சையாகவும் மாறியது. கனிமொழி வந்தது தொடர்பாக ஷர்மிளாவுக்கும், பஸ் நிர்வாகத்துக்கும் இடையே பூசல் ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகின. இந்த நிலையில் தனது வேலையை உதறி விட்டு வெளியேறினார் ஷர்மிளா. அது முதல் அவருக்கு ஆதரவாக பலரும் கருத்து தெரிவித்து வந்தனர்.கனிமொழியும் கூட ஷர்மிளாவுக்கு தேவையான உதவிகளைச் செய்ய காத்திருப்பதாக தெரிவித்திருந்தார். சில தனியார் நிறுவனங்களும் ஷர்மிளாவுக்கு வேலை தர முன்வந்தன.




இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் சத்தம் போடாமல் ஒரு காரியத்தைச் செய்துள்ளார். ஷர்மிளாவையும் அவரது குடும்பத்தினரையும் சென்னைக்கு வரவழைத்த கமல்ஹாசன், ஷர்மிளாவுக்கு ஒரு காரைப் பரிசாக அளித்து அசத்தி விட்டார். மாருதி எர்டிகா காரை வாங்குவதற்கான காசோலையை ஷர்மிளாவிடம் கமல்ஹாசன் அளித்தார். இனி மகள் ஷர்மிளா ஒரு வாடகைக் கார் தொழில் முனைவோராக வலம் வருவார். தன் வயதையொத்த பெண்களுக்கு அவர் சிறந்த ரோல்மாடலாக மாறியுள்ளார். அவர் குறித்த சமீபத்திய விவாதங்கள் என்னை வேதனையுறச் செய்தது என்றும் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 


கமல்ஹாசன் பண்பாட்டு மையம் சார்பில் இந்த கார் பரிசு அளிக்கப்படுகிறது.