விறுவிறுப்படையும் கர்நாடக தேர்தல் களம்...ஓய்வை அறிவித்த பாஜக.,வின் ஈஸ்வரப்பா

Aadmika
Apr 12, 2023,03:36 PM IST
பெங்களுரு : கர்நாடக சட்டசபை தேர்தலால் கர்நாடக அரசியல் களம் பரபரப்படைந்துள்ள நிலையில் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக பாஜக.,வின் கே.எஸ்.ஈஸ்வரப்பா அறிவித்துள்ளார். கட்சி தலைவர் ஜே.பி.நட்டாவுக்கு எழுதி உள்ள கடிதத்தில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

கர்நாடக சட்டசபை தேர்தல் மே 10 ம் தேதி நடைபெற உள்ளது. இதில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை பாஜக வெளியிட்டு வருகிறது. காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளன. இப்படி பல விதங்களில் தேர்தல் களம் விறுவிறுப்படைந்துள்ளது. இந்நிலையில் கர்நாடக பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான ஈஸ்வரப்பா, அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 



கட்சி தலைவர் நட்டாவுக்கு எழுதி உள்ள கடிதத்தில், மே 10 ம் தேதி நடைபெற உள்ள தேர்தலிலும் தான் பங்கேற்க போவதில்லை என தெரிவித்துள்ளார். சர்ச்சை பேச்சுக்களுக்கு பெயர் போன ஈஸ்வரப்பா, கடந்த ஆண்டு தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். உடுப்பி ஓட்டலில் கான்ட்ராக்டர் சந்தோஷம் பாட்டில் என்பவர் தற்கொலை செய்து கொண்டார். ஈஸ்வரப்பா தன்னிடம் 40 சதவீதம் கமிஷன் கேட்ட நெருக்கடி கொடுத்ததாகவும், இதன் காரணமாகவே தான் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும் அவர் கடிதம் எழுதி வைத்திருந்ததால், ஈஸ்வரப்பா தனது பதவியை ராஜினாமா செய்தார்.

பிறகு தன் மீது தவறு இல்லை என்பதை ஈஸ்வரப்பா நிரூபித்து, அந்த விவகாரத்தில் இருந்து வெளியே வந்தார். கர்நாடக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் முதல் பட்டியலை பாஜக சமீபத்தில் வெளியிட்டது. இதில் ஈஸ்வரப்பாவின் பெயர் இல்லை. இதனால் ஏற்பட்ட விரக்தியால் தான் 75 வயதாகும் ஈஸ்வரப்பா அரசியல் ஓய்வை அறிவித்துள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. 

அதே சமயம் கட்சி நலனை கருத்தில் கொண்டு, ஈஸ்வரப்பா தனது முடிவை மாற்றிக் கொள்ள வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ஈஸ்வரப்பாவிற்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.