பாரத் ஜோடோ யாத்திரை.. இன்றுடன் நிறைவு.. "இது முடிவல்ல.. தொடக்கம்".. ராகுல் காந்தி நெகிழ்ச்சி!
ஸ்ரீநகர்: காங்கிரஸ் இளம் தலைவர் ராகுல் காந்தி மேற்கொண்ட பாரத் ஜோடோ யாத்திரை இன்று ஸ்ரீநகரில் கொடியேற்றத்துடன் நிறைவு பெறுகிறது. இதில் பல்வேறு எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். "இது முடிவல்ல, தொடக்கம் என்று ராகுல் காந்தி உணர்ச்சிகரமாக தெரிவித்துள்ளார்.
2022ம் ஆண்டு செப்டம்பர் 7ம் தேதி தமிழ்நாட்டின் கன்னியாகுமரியிலிருந்து தனது பாரத் ஜோடோ யாத்திரை எனப்படும் ஒற்றுமை யாத்திரையை தொடங்கினார் ராகுல் காந்தி. தமிழ்நாட்டில் நான்கு நாட்கள் அவரது பாத யாத்திரை நடந்தது. அதன் பின்னர் கேரளாவில் யாத்திரை தொடர்ந்தது. அங்கு 18 நாட்கள் பல்வேறு மாவட்டங்களிலும் யாத்திரையை மேற்கொண்டார் ராகுல் காந்தி.
அடுத்து கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், ஹரியானா, டெல்லி, உத்தரப் பிரதேசம், பஞ்சாப், இமாச்சலப் பிரதேசம் மூலமாக ஜம்மு காஷ்மீருக்கு வந்தடைந்தார். இதில் அதிகபட்சமாக கர்நாடக மாநிலத்தில் மட்டும் 21 நாட்கள் ராகுல் காந்தியின் யாத்திரை நடந்தது. குறைந்த நாட்கள் என்றால் அது இமாச்சலப் பிரதேசம் தான். அங்கு ஒரு நாள் மட்டுமே யாத்திரை நடந்தது. டெல்லியில் 2 நாட்கள் யாத்திரை மேற்கொண்டார் ராகுல் காந்தி.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 11 நாட்கள் ராகுல் காந்தி யாத்திரை நடந்தது. நேற்று லால் சவுக்கில் ராகுல் காந்தி தேசியக் கொடியை ஏற்றி வைத்து சல்யூட் செய்தார். இன்று காலை 10 மணியளவில் ஸ்ரீநகரில் தேசியக் கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் பல்வேறு எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டு பேசவுள்ளனர். அத்துடன் பாரத் ஜோடோ யாத்திரை இயக்கம் நிறைவு பெறும்.
திமுக, தேசியவாத காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதாதளம், ஐக்கிய ஜனதாதளம், சிவசேனா, சிபிஐ, சிபிஎம், விடுதலைச் சிறுத்தைகள், கேரளா காங்கிரஸ், தேசிய மாநாடு, ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயகக் கட்சி, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா ஆகிய கட்சிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளன.
காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி நேற்றைய யாத்திரையில் கலந்து கொண்டார். இன்றைய கூட்டத்திலும் அவர் பங்கேற்கிறார். இன்றைய கூட்டத்திற்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமை வகிக்கிறார். இக்கூட்டத்திற்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
14 மாநிலங்கள்
ராகுல் காந்தி நாடு முழுவதும் 2 யூனியன் பிரதேசங்கள் உள்பட 14 மாநிலங்களில் கிட்டத்தட்ட 4080 கிலோமீட்டர் தொலைவுக்கு யாத்திரை மேற்கொண்டார். 145 நாட்கள் அவர் நடந்துள்ளார். 12 பொதுக்கூட்டங்களில் பேசியுள்ளார். 100க்கும் மேற்பட்ட சிறு கூட்டங்களில் அவர் பேசியுள்ளார். 13 செய்தியாளர் சந்திப்பை நடத்தியுள்ளார். 275க்கும் மேற்பட்ட நடந்து கொண்டே தலைவர்களுடன் விவாதித்துள்ளார். 100க்கும் மேற்பட்ட அமர்ந்து கொண்டே நடந்த விவாதங்களில் கலந்து கொண்டுள்ளார்.
நாடு முழுவதும் நடந்த யாத்திரையில் ஒவ்வொரு மாநிலத்திலும் பல்வேறு முக்கியத் தலைவர்கள் அவருடன் இணைந்து நடந்தனர். தமிழ்நாட்டிலிருந்து கமல்ஹாசன், கனிமொழி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் ராகுல் காந்தியுடன் நடந்தனர். அதேபோல பல்வேறு தேசியத் தலைவர்களும் ராகுல் காந்தியுடன் கை கோர்த்தனர்.
அழகான அனுபவம்
இந்த யாத்திரை குறித்து ராகுல் காந்தி நேற்று போட்ட டிவீட்டில், எனது வாழக்கையின் மிகவும் அழகான, அருமையான அனுபவங்களில் ஒன்றாக பாரத் ஜோடோ யாத்திரை அமைந்தது. இது முடிவல்ல. முதல் படிதான், தொடக்கம்தான் என்று கூறியுள்ளார் ராகுல் காந்தி.
முன்னதாக ஸ்ரீநகரில் செய்தியாளர்களைச் சந்தித்தார் ராகுல் காந்தி. அப்போது அவர் கூறியதாவது:
நமது நிலத்தின் மீது சீனா அமர்ந்திருக்கிறது. அதை நாம் பொறுத்துக் கொள்ளக் கூடாது. சீன விவகாரத்தில் மத்திய அரசு இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும். உறுதியாக செயல்பட வேண்டும். சீனா நமது நிலத்தை எடுக்கவில்லை என்று தொடர்ந்து மறுத்து வருகிறது மத்திய அரசு. இது அபாயகரமானது. இன்னும் மோசமான முறையில் சீனா செயல்பட இது வழி வகுக்கும். நான் சமீபத்தில் சில ஓய்வு பெற்ற ராணுவத்தினரை சந்தித்தேன். லடாக்கிலிருந்து ஒரு குழு வந்து என்னை சந்தித்தது. அப்போது இந்திய எல்லைக்குள் 2000 சதுர கிலோமீட்டர் வரை சீனா ஊடுறுவியிருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.
ஜம்மு காஷ்மீரில் அமைதி நிலவுகிறது, நிலைமை சரியாக உள்ளது என்று பாஜக தலைவர்கள் கூறுகிறார்கள். அப்படியானால், ஏன் பாஜக தலைவர்கள் ஜம்முவிலிருந்து -லால் சவுக் வரை நடந்து வரக் கூடாது. அமித் ஷா நடந்து வரட்டுமே.. ! என்றார் ராகுல் காந்தி.