ஜாவலின் துரோ.. உலகின் நம்பர் 1 வீரரானார் இந்தியாவின் நீரஜ் சோப்ரா

Su.tha Arivalagan
May 24, 2023,10:27 AM IST
டெல்லி: ஜாவலின் துரோ (ஈட்டி எறிதல்) போட்டியில் உலகின் முதல் நிலை வீரராக உயர்ந்துள்ளார் இந்தியாவின் நீரஜ் சோப்ரா.

உலக  தடகள சங்கம் வெளியிட்ட தரவரிசைப் பட்டியலில் ஜாவலின் துரோவில் நீரஜ் சோப்ரா முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார். அவர்  முதல் நிலைக்கு உயர்வது இதுவே முதல் முறையாகும்.

1455 புள்ளிகளுடன் சோப்ரா முதலிடத்தைப் பிடித்துள்ளார். இவருக்கு அடுத்த இடத்தில் கிரெனடாவின் ஆண்டர்சன் பீட்டர்ஸ் உள்ளார். இவர்தான் தற்போது உலக ஜாவலின் துரோ சாம்பியன் ஆவார். டோக்கியோ ஒலிம்பிக்ஸில் வெள்ளிப் பதக்கம் வென்ற செக் நாட்டின் ஜாக்குப் வட்லஜேக் 3வது இடத்தில் இருக்கிறார்.



கடந்த ஆண்டு ஆகஸ்ட் 30ம் தேதி இரண்டாவது இடத்திற்கு முன்னேறியிருந்த நீரஜ் சோப்ரா அதன் பின்னர் தொடர்ந்து அதே இடத்திலேயே இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஜூரிச்சில் நடந்த டயமன்ட் லீக் 2022 இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று கோப்பையை தட்டி வந்தார். அந்தக் கோப்பையை வென்ற முதல் இந்தியர் நீரஜ் சோப்ராதான்.

ஜாவலின் துரோவில் உலகின் முதல் நிலை வீரராக உயர்ந்துள்ள நீரஜ் சோப்ராவுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.