ஹிட்லரைப் புகழ்ந்து போஸ்ட் போட்ட இந்தியர்.. கடும் எதிர்ப்பு.. மன்னிப்பு கேட்டார்!
May 25, 2023,11:56 AM IST
வாஷிங்டன்: ஜெர்மனி நாட்டின் சர்வாதிகாரி அடால்ப் ஹிட்லரைப் புகழ்ந்து லிங்க்இன் சமூக வலைதளத்தில் போஸ்ட் போட்ட இந்தியருக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பவே அவர் பகிரங்க மன்னிப்பு கோரி தனது பதிவை நீக்கி விட்டார்.
அந்த நபரின் பெயர் நீரப் மல்ஹோத்ரா. டிலாய்ட் இந்தியா நிறுவனத்தின் முன்னாள் ஊழியர். இவர் ஹிட்லர் குறித்து ஒரு லிங்க்ட்இன் பதிவைப் போட்டிருந்தார். அதில் ஹிட்லர் மிகவும் வசீகரமானவர், அறிவாளி, காந்தத்தின் ஈர்ப்பு கொண்ட பேச்சாளர் என்றெல்லாம் வர்ணித்திருந்தார்.
மேலும், பல லட்சம் பெண்கள், குழந்தைகள், ஆண்களை ஹிட்லர் கொன்றிருந்தாலும் கூட அவரது அந்த வசீகரத்துக்காக அவரை நாம் பாராட்டியே ஆக வேண்டும் என்றெல்லாம் அந்த நபர் எழுதியிருந்தார். Friday Inspiration என்ற தலைப்பில் இந்த பதிவைப் போட்டிருந்தார் நீரப் மல்ஹோத்ரா.
இந்தப் பதிவுக்கு மிகக் கடுமையான எதிர்ப்புகள் கிளம்பின. பலரும் வந்து கண்டனம் தெரிவிக்க ஆரம்பித்தனர். நீரப் மல்ஹோத்ராவை லிங்க்ட்இன் தளம் சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்று பலரும் கோரிக்கை வைத்தனர்.
இதையடுத்து டிலாய்ட் நிறுவனம் ஒரு விளக்கம் அளித்தது. சம்பந்தப்பட்ட நபர் தங்களது நிறுவனத்தில் பணியாற்றவில்லை என்று அது கூறியிருந்தது. கடந்த மாதம்தான் நீரப் டிலாய்ட் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்திருந்தார். ஆனால் தற்போது அதிலிருந்து நீக்கப்பட்டு விட்டார்.
கடும் எதிர்ப்புக் கிளம்பியதைத் தொடர்ந்து தற்போது தனது பதிவை நீரப் நீக்கி விட்டார். அத்தோடு பகிரங்க மன்னிப்பும் அவர் கேட்டுள்ளார். யாருடைய மனதையும், உணர்வுகளையும் புண்படுத்தும் நோக்கம் தனக்கு இல்லை என்றும். இனிமேல் மிகவும் கவனமாக இருப்பேன் என்றும் கூறியுள்ளார் நீரப் மல்ஹோத்ரா.