ஏடிஎம்.,ல் பணம் தான் வரும்...இப்போ பிரியாணியும் வருது...நிஜமா இது நம்ம சென்னைல தாங்க

Aadmika
Mar 15, 2023,04:59 PM IST

சென்னை : வழக்கமாக ஏடிஎம்.,ல் கார்டு போட்டால் பணம் எடுக்கலாம். ஆனால் சென்னையில் பணத்திற்கு மட்டுமல்ல பிரியாணிக்கும் ஏடிஎம்., வந்திருக்கு. இது சென்னை மக்களை, அதுவும் பிரியாணி பிரியர்களை ரொம்பவே கவர்ந்துள்ளது.


பிரியாணி வாங்குவதற்காக முதன் முதலில் ஏடிஎம் மிஷின் வைத்த ஊர் என்ற பெருமையை இந்தியாவிலேயே நம்ம சென்னை இப்போது பெற்றுள்ளது. இந்த மிஷினில் வாடிக்கையாளர் பிரியாணி ஆர்டர் செய்த சில நிமிடங்களிலேயே சுடசுட பிரியாணி கைக்கு வந்து விடுகிறது. 


சென்னையை சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனமான பாய் வீட்டு கல்யாணம் என்ற பிரபலமான பிரியாணி கடை கொளத்தூர் பகுதியில் இயங்கி வருகிறது. பரம்பரிய முறையில், பாய் வீட்டு கல்யாண சுவையில் பிரியாணி விற்பனை செய்து வருகிறது. இதுவரை ஆன்லைனில் மட்டும் ஆர்டர் செய்து இந்த கடையில் வாடிக்கையாளர்கள் பிரியாணி வாங்கி, சுவைத்து வந்தனர்.




இந்நிலையில் வாடிக்கையாளர்களை கவருவதற்காக புதிய முயற்சியை ஒன்றை இந்நிறுவனம் கையில் எடுத்துள்ளது. இது பற்றி அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், பிரியாணி ஆர்டர் செய்து விட்டு பசியுடன் இனி காத்திருக்க வேண்டியதில்லை. ஆர்டர் செய்தால் கிடைப்பது போல் உடனுக்குடன் சுடசுட பிரியாணியை எடுத்துக் கொண்டு போகலாம் என தெரிவித்துள்ளது.


வாடிக்கையளர்கள் நேரில் வந்து இந்த ஏடிஎம் மிஷில் பணம் செலுத்தி, தங்களுக்கு விருப்பமான வகை பிரியாணியை உடனடியாக  பெற்றுச் செல்லலாம். வாடிக்கையாளர்கள், மெனு வசதியை தேர்வு செய்து, அதில் தங்களின் ஆர்டரை பதிவிட வேண்டும். அதிலுள்ள க்யூ ஆர் கோடினை பயன்படுத்தியோ அல்லது கார்டு மூலமாகவோ பெயர் மற்றும் மொபைல் நம்பரை பதிவிட்டு, பணம் செலுத்த வேண்டும். பணம் எடுக்கப்பட்ட உடன் கவுன்டவுன் ஸ்க்ரீனில் ஓட துவங்கும். சில நிமிடங்களிலேயே மிஷினில் கீழுள்ள பலகை வழியாக ஆட்டோமெடிக் மிஷின் மூலம் பிரியாணி ஆர்டரை பெற்றுக் கொள்ளலாம்.


ஆளேயில்லாமல் பிரியாணி பார்சல் செய்து கைக்கு வரும் இந்த பிரியாணி ஏடிஎம் பற்றிய வீடியோ சோஷியல் மீடியாவில் தற்போது தாறுமாறாக வைரலாகி வருகிறது.  2020 ம் ஆண்டு முதல் பாய் வீட்டு கல்யாணம் பிரியாணி கடை இயங்கி வருகிறது. இந்த கடை பிரியாணிக்கு வாடிக்கையாளர்கள் அதிகம். 2020 ம் ஆண்டில் ஸ்விகி ஆப் மூலமாக ஒரு நிமிடத்திற்கு 137 பிரியாணி ஆர்டர்களையும், செமாடோ ஆப் மூலம் ஒரு நிமிடத்திற்கு 186 பிரியாணி ஆர்டர்களையும் இந்நிறுவனம் பெற்றுள்ளது.