நாக்பூர் டெஸ்ட் போட்டி: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி.. அஸ்வின் செம!

Aadmika
Feb 11, 2023,02:55 PM IST

நாக்பூர் : நாக்பூரில் நடைபெற்ற இந்தியா - ஆஸ்திரேலியா டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 1 இன்னிங்ஸ்  132 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி, இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது.


இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. பார்டர் - கவாஸ்கர் டிராபியின் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாக்பூரில் பிப்ரவரி 09 ம் தேதி துவங்கியது. இரண்டாவது நாள் ஆட்ட நேர இறுதியில் இந்திய அணி 114 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 321 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் இருந்தது. பேட்டிங்கில் அசத்திய ரவீந்திர ஜடேஜா, 170 பந்துகளில் 66 ரன்கள் எடுத்தார். 


டெஸ்ட் போட்டியின் முதல் நாளிலேயே ஆஸ்திரேலிய அணியின் 5 விக்கெட்களை கைப்பற்றி கபில்தேவின் சாதனையை சமன் செய்தார்  ஜடேஜா. இரண்டாவது நாளில் அவரது பேட்டிங் திறமையும் பேசப்பட்டது. முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஓய்வில் இருந்த ரவீந்திர ஜடேஜா, மீண்டும் விளையாட களமிறங்கிய முதல் சர்வதேச போட்டியிலேயே பேட்டிங் - பவுலிங் என இரண்டும் கலக்கி உள்ளார்.


144 ரன்கள் முன்னிலை என்ற நிலையில் மூன்றாம் நாள் ஆட்டத்தை இந்திய அணி துவங்கியது. 139.3 ஓவரில் 400 ரன்கள் எடுத்த நிலையில் முதல் இன்னிங்சை நிறைவு செய்தது இந்திய அணி. உணவு இடைவேளைக்கு முன் 223 ரன்கள் முன்னிலை என்ற நிலையில் முதல் இன்னிங்சை இந்திய அணி நிறைவு செய்தது. உணவு இடைவேளைக்கு பிறகு இரண்டாவது இன்னிங்சை துவக்கிய ஆஸ்திரேலிய அணி, மளமளவென விக்கெட்களை பறிகொடுத்தது. 


இந்திய அணி பவுலர்களின் பந்துவீச்சை தாக்கு பிடிக்க முடியாத ஆஸ்திரேலிய அணி, 2வது இன்னிங்ஸில் 91 ரன்களில் சுருண்டது. 1 இன்னிங்ஸ்  132 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி, இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்திய அணியில் மூன்றாவது நாள் ஆட்டத்தின் போது அஸ்வின் அபாரமாக பந்து வீசி 5 விக்கெட்களை சாய்த்தார். சமி, ஜடேஜா தலா 2 விக்கெட்களை கைப்பற்றினர். அக்ஸர் படேலுக்கு ஒரு விக்கெட் வீழ்த்தினார்.