அழகான முறையில் எதிர்க்கட்சிகள் திரண்டு வருகின்றன.. ராகுல் காந்தி

Su.tha Arivalagan
May 31, 2023,03:42 PM IST
சான்டா கிளாரா, அமெரிக்கா: வெறுமனே எதிர்க்கட்சிகள் இணைந்தால் மட்டும் பாஜகவை வீழ்த்தி விட முடியாது. மாறாக, சரியான முறையில் அந்தக் கூட்டணி அமைய வேண்டும். அப்படிப்பட்ட கூட்டணி தற்போது அழகாக உருவாகி வருகிறது என்று கூறியுள்ளார் காங்கிரஸ் இளம் தலைவர் ராகுல் காந்தி.

அமெரிக்காவுக்கு சென்றுள்ளார்  ராகுல் காந்தி. சான்டாக்ரூஸில் உள்ள சிலிக்கான் வேலி பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த கூட்டத்தில் அவர்  கலந்து கொண்டு பேசினார். அப்போது எழுப்பப்பட்ட பல்வேறு கேள்விகளுக்கும் அவர் பதிலளித்தார்.



ராகுல் காந்தி அளித்த பதில்களின் தொகுப்பு:

பாஜகவை வீழ்த்த முடியாது என்று இல்லை. நிச்சயம் வீழ்த்த முடியும். அவர்களுக்கும் பலவீனங்கள் உள்ளன. ஆனால் எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டால் மட்டும் அது நடந்து விடாது. மாறாக சரியான முறையில் இணைய வேண்டும்.  அது தற்போது அழகாக நடந்து வருகிறது. முற்றிலும் பார்வைகள் மாற வேண்டும். அதுவும் முக்கியம். அதுவும் சேரும்போதுதான் பாஜகவை வீழ்த்த முடியும்.

பாஜக தனது பண பலத்தை முழுமையாக கர்நாடகத்தில் பயன்படுத்தியது. எங்களை விட 10 மடங்கு அதிகமாக செலவழித்தார்கள். கர்நாடகத்தில் நடந்த தேர்தலில் பாஜகவை எதிர்த்து நாங்கள் வெற்றி பெற்றோம் என்றுதான் பலரும் பொதுவாக நினைக்கிறார்கள். ஆனால் நாங்கள் என்ன மாதிரியான பார்முலாவை பயன்படுத்தினோம் என்பதை யாரும் கவனிக்கவில்லை. இதற்கு முந்தைய தேர்தல்களில் கடைப்பிடித்த முறையை முற்றிலும் இந்த முறை மாற்றி விட்டோம். பாரத் ஜோடோ யாத்திரையின் பின்விளைவை இந்தத் தேர்தலில் காண முடிந்தது.

பாரத் ஜோடோ யாத்திரையானது, பாஜக குறித்த பார்வையை மாற்ற உதவியது. அதன் முதல்கட்டம்தான் இந்த யாத்திரை. இது எதிர்க்கட்சிகளை மன ரீதியாக இணைக்க உதவியது. பாரத் ஜோதோ யாத்திரையை எல்லா எதிர்க்கட்சிகளும் வரவேற்றன. இதுதான் இப்போதைய தேவை. வெறுமனே அணி சேராமல் அகன்ற பார்வையுடன், நீண்ட கால நோக்குடன்,உறுதியான மனப்பாங்குடன் இணைய வேண்டும். அது நடந்து வருகிறது.

பிரதமர் வேட்பாளர் குறித்தெல்லாம் இப்போது பேச வேண்டிய அவசரமும் இல்லை, அவசியமும் இல்லை. இங்கு மக்கள்தான் முக்கியம். மக்களுக்கு சேவை செய்வதுதான் முக்கியம். மக்களின் குரல் மதிக்கப்பட வேண்டும் என்றார் ராகுல் காந்தி.