"டெலிகேட் பொசிஷன்".. சத்திய  சோதனையில் சென்னை ரசிகர்கள்.. யாரை ஆதரிக்கலாம்??

Su.tha Arivalagan
Jun 27, 2023,01:49 PM IST
சென்னை: சென்னையில் 5 உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில் அதில் ஒரு போட்டி மட்டும்தான் இந்தியா விளையாடும் போட்டியாகும். 

மற்ற  நான்கு போட்டிகளும் இந்தியா தொடர்பில்லாதவையாகும். அதிலும் 2 போட்டிகள் பாகிஸ்தான் விளையாடப் போகும் போட்டிகள் ஆகும். இதனால் சென்னை ரசிகர்களுக்கு ஒரு விதமான இன்ப தர்ம சங்கடம் ஏற்பட்டுள்ளது.

இந்தியா பங்கேற்கும் முதல் போட்டியே சென்னையில்தான் நடைபெறவுள்ளது. இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான இந்தப் போட்டி அக்டோபர் 8ம் தேதி சென்னையில் நடைபெறும். இந்தப் போட்டியை தடபுடலாக கொண்டாட ரசிகர்கள் இப்பவே ரெடியாகி விட்டனர்.

இதைத் தொடர்ந்து சென்னையில் நடைபெறும் 2வது போட்டி நியூசிலாந்து - வங்கதேசம் இடையிலானது. இப்போட்டி அக்டோபர் 14ம் தேதி நடைபெறும். தொடர்ந்து அக்டோபர் 18ம் தேதி நியூசிலாந்து ஆப்கானிஸ்தான் போட்டி இடம் பெறுகிறது.

அக்டோபர் 23 மற்றும் 27 ஆகிய இரு நாட்களிலும் பாகிஸ்தான் போட்டிகள் நடைபெறவுள்ளன. 23ம் தேதி ஆப்கானிஸ்தானையும், 27ம் தேதி தென் ஆப்பிரிக்காவையும் பாகிஸ்தான் சந்திக்கவுள்ளது. 

இந்தப் போட்டிகளில் சென்னை ரசிகர்களின் ஆதரவு யாருக்கு என்ற கேள்வி எழுந்துள்ளது. சென்னை ரசிகர்கள் மிகவும் டிசிப்ளின் ஆனவர்கள் என்பது உலகம் அறிந்தது. மேலும் கிரிக்கெட்டை முழுமையாக மதித்து நேசிக்கக் கூடியவர்களும் கூட. இதே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில்தான் பாகிஸ்தானின் சயீத் அன்வர் உலக சாதனை படைத்த பேட்டிங்கை வெளிப்படுத்தியபோது  அதை பாராட்டி வரவேற்று ஸ்டான்டிங் ஓவேஷன் கொடுத்தனர் சென்னை ரசிகர்கள். அந்த அளவுக்கு கிரிக்கெட்டுக்கு முதலிடம் கொடுத்தவர்கள் சென்னை ரசிகர்கள்.

இந்த முறையும் இந்தியா சம்பந்தப்படாத பிற போட்டிகளையும் அதே நாகரீகத்தோடும், யார் சிறப்பாக விளையாடுகிறார்களோ அவர்களை ஆதரித்தும் போட்டியை ரசிப்பார்கள் என்று எதிர்பார்க்கலாம். இருப்பினும் பாகிஸ்தான் தொடர்புடைய போட்டிகளில் கண்டிப்பாக சென்னை ரசிகர்களின் ஆதரவு எதிரணியினருக்கே சற்று கூடுதலாக கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கலாம்.