டில்லி, மும்பை, ஐதராபாத்தை மிரட்டும் கனமழை...அலார்ட் விடுத்த வானிலை மையம்

Aadmika
Jun 29, 2023,11:07 AM IST
டில்லி : டில்லி, மும்பை, ஐதராபாத் ஆகிய நகரங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் பல மாட்டங்களுக்கு அதிதீவிர கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது இந்திய வானிலை மையம்.

ஐதராபாத்தில் சார்மினார், செகந்திராபாத் உள்ளிட்ட 10 மாட்டங்களில் இன்று மிக அதிக அளவில் மழை கொட்டும் என இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது. இதனால் ஐதராபாத்திற்கு எல்லோ அலார்ட் விடுக்கப்பட்டுள்ளது.  கடந்த 24 மணி நேரத்தில் மிக அதிக பட்சமாக அதிலாபாத்தில் 47.5 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. அடுத்த 3 நாட்களுக்கு ஐதராபாத் மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் மழை தொடரும் என்றும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.



மும்பையிலும் இன்று கனமழை பெய்யும் என எச்சரித்துள்ள இந்திய வானிலை மையம் அங்குள்ள 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது. மகாராஷ்டிராவில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தானே, ரத்னகிரி, நாசிக் உள்ளிட்ட மும்பையை ஒட்டிய 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அடுத்த 4 முதல் 5 நாட்களுக்கு மகாராஷ்டிராவில் பல பகுதிகளில் மழை தொடரும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.



மும்பையில் பல இடங்களில் தண்ணீர் தேங்கி உள்ளதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் மரங்கள் அடியோடு சாய்ந்துள்ளன. கனமழையில் சிக்கி இதுவரை இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர். பல இடங்களில் 100 மில்லி மீட்டருக்கும் அதிகமாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். பக்ரீத் தின நாளில் கனமழை கொட்டி தீர்த்து வருவதால் பக்ரீத் கொண்டாட்டங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.