"ஆளுநர்கள் அரசியல் பேசக் கூடாது.. கடந்த காலத்தை மறந்து விட வேண்டும்".. சி.பி. ராதாகிருஷ்ணன்
Feb 14, 2023,02:49 PM IST
சென்னை: ஆளுநர்கள் அரசியலை பேசக் கூடாது. கடந்த காலத்தில் எப்படி இருந்தோம், எங்கு இருந்தோம் என்பதை மறந்து விட வேண்டும். தாங்கள் சம்பந்தப்பட்ட மாநிலத்தின் வளர்ச்சி பற்றி மட்டுமே யோசிக்க வேண்டும் என்று ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள சி.பி.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
சில நாட்களுக்கு முன்பு வரை தீவிர பாஜக காரராக இருந்தவர் சி.பி.ராதாகிருஷ்ணன். அவரை தற்போது ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக மத்திய பாஜக அரசின் பரிந்துரையின்பேரில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நியமித்துள்ளார்.
கோவை பாஜக அரசியல் தலைவர்களில் மிக முக்கியமானவர் சி.பி.ராதாகிருஷ்ணன் . தமிழ்நாடு பாஜக தலைவர் பதவிக்காக காத்திருந்தார் சி.பி.ராதாகிருஷ்ணன் என்று கூறப்பட்டு வந்தது. இந்த நிலையில் திடீரென அவரை ஆளுநராக்கியுள்ளனர். ஆளுநர் பொறுப்பை ஏற்பதற்காக ராஞ்சி செல்லும் வழியில் சென்னை விமான நிலையம் வந்தார் சி.பி.ராதாகிருஷ்ணன். அங்கு செய்தியாளர்கள் அவரைச் சந்தித்தனர்.
செய்தியாளர்களிடையே சி.பி.ராதாகிருஷ்ணன் பேசுகையில், ஒருவர் வழக்கறிஞராக இருக்கும் வரை நீதிக்காக அவர் வாதாடலாம். ஆனால் அவரே நீதிபதியாகி விட்டால், அவர் நீதியை மட்டுமே கொடுக்க வேண்டும்.
அதேபோலத்தான் அரசியல் தலைவர்களும். ஆளுநர்களாகி விட்டால், தங்களது அரசியல் அபிலாஷைகளை, கருத்துக்களை விட்டு விட வேண்டும். தாங்கள் சார்ந்த மாநிலங்களின் வளர்ச்சி குறித்து மட்டுமே சிந்திக்க வேண்டும், பேச வேண்டும் என்றார் சி.பி.ராதாகிருஷ்ணன்.
அவரது இந்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாஜகவைச் சேர்ந்தவரான தமிழிசை செளந்தரராஜன் தெலங்கானா மற்றும் புதுச்சேரிக்கான ஆளுநராக உள்ளார். அதேபோல ஆர்.என். ரவி தமிழ்நாடு ஆளுநராக இருக்கிறார். இருவருமே மறைமுமாக அரசியல் ரீதியாகவும் பேசி வருவதாக அடிக்கடி சலசலப்புகளும் சர்ச்சைகளும் வந்தவண்ணம் உள்ளது. குறிப்பாக தமிழிசை வெளிப்படையாகவே அரசியல் பேசவும் செய்கிறார். ஆளுநர் ரவியோ திராவிட குறித்தெல்லாம் விமர்சித்துப் பேசியுள்ளார். அவரது தமிழ்நாடு பேச்சும் கூட சர்ச்சையானது.
இந்த நிலையில் சி.பி.ராதாகிருஷ்ணன் கூறியிருப்பது, மறைமுகமாக இந்த இருவரைப் பற்றியுமா என்ற கேள்வியை அரசியல் நோக்கர்கள் எழுப்பியுள்ளனர். பாஜகவின் முக்கியத் தலைவர்கள், பாஜகவுக்கு வேண்டப்பட்டவர்கள்தான் பெரும்பாலும் பாஜக ஆளாத மாநிலங்களின் ஆளுநர்களாக நியமிக்கப்படுகிறார்கள். அந்த வகையில் ஜார்க்கண்ட் மாநிலத்திலும் கூட பாஜக சாராத முதல்வர் ஹேமந்த் சோரன் பதவியில் உள்ளார். பாஜக பிரமுகர்கள் ஆளுநர்களாக உள்ள கேரளா, மேற்கு வங்காளம், தெலங்கானா போன்ற மாநிலங்களில் மாநில அரசுகளுக்கும், ஆளுநர்களுக்கும் இடையே கடும் மோதல் இருந்தபடி உள்ளது. தமிழ்நாட்டிலும் கூட ஆர். என்.ரவிக்கும், தமிழ்நாடு அரசுக்கும் அவ்வப்போது உராய்வு இருந்து கொண்டே இருக்கிறது.
இந்த நிலையில் சி.பி.ராதாகிருஷ்ணன் எப்படி செயல்படப் போகிறார் என்பது பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம், முன்னாள் பாஜக தலைவரான, இல.கணேசன் தான் ஆளுநராக இருந்த மணிப்பூரில் எந்தவிதான சர்ச்சையிலும் சிக்காமல் தான் உண்டு தன் வேலையுண்டு என்���ு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.