போர்க்களமான பிரான்ஸ்...கூலாக இசை நிகழ்ச்சியை ரசித்த அதிபரின் வைரஸ் வீடியோ
Jul 01, 2023,01:05 PM IST
பாரிஸ் : பிராவ்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள நான்டேன் பகுதியில் ஆப்பிரிக்க வம்சாவளியை சேர்ந்த 17 வயது சிறுவன் சமீபத்தில் சுட்டுக் கொல்லப்பட்டான். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டில் போராட்டம் நடந்து வருகிறது. இந்த போராட்டம் வன்முறையாக மாறி உள்ளது. இதுவரை நூற்றுக் கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வாகனங்கள், அரசு அலுவலகங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டதால் கடந்த 3 நாட்களாக பிரான்சில் வன்முறை, கலவரம் நீடித்து வருகிறது. கலவரத்தை ஒடுக்க 25,000 போலீசார் களமிறக்கப்பட்டுள்ளனர். முக்கிய நகரங்களில் பாதுகாப்பு பணிக்காக 40,000 க்கும் அதிகமான போலீசாரும், ராணுவத்தினரும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.
நாடே போர்க்களமாக மாறி உள்ள நிலையில் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் கேளிக்கை விடுதி ஒன்றில் இசை நிகழ்ச்சியை ரசித்துக் கொண்டிருக்கும் வீடியோ ஒன்று சோஷியல் மீடியாவில் தீயாய் பரவி வருகிறது. இது இப்போது எடுக்கப்பட்ட வீடியோ தானா அல்லது பழைய வீடியோ தற்போது வைரலாக்கப்பட்டு வருகிறதா என தெரியவில்லை. ஆனால் பிரான்ஸ் அதிபரின் இந்த செயலை சோஷியல் மீடியா பயனாளர்கள் திட்டி தீர்த்து வருகின்றனர்.