Flashback 2023: லியோ முதல்.. ஜிகர்தண்டா டபுள் X வரை.. "லோக்கல் வசூல் ராஜா" யாருன்னு பாருங்க!
சென்னை: தமிழ்த் திரையுலகம் இந்த வருடம் செமத்தியான வசூல் படங்களைக் கண்டுள்ளது. சொல்லி வைத்தாற் போல அடுத்தடுத்து சூப்பர் ஹிட் பிளாக்பஸ்டர் படங்கள் வந்து திரையுலகை மலர்ச்சிப்படுத்தியுள்ளது.
ஒவ்வொரு வருடமும் பிரபல நட்சத்திரங்களின் திரைப்படங்கள் என்றால் ரசிகர்களிடையே நல்ல எதிர்பார்ப்பு இருக்கும். அப்படி வெளிவந்த படங்கள் நல்ல வசூலை பெற்று முன்னிலையில் இருக்கும். அந்த வரிசையில் இந்த வருடமும் வெளியான சூப்பர் நடிகர்களின் படங்கள் யாரையும் ஏமாற்றவில்லை. சிறப்பான வசூலை வாரிக் குவித்துள்ளன.
2023ல் எந்தெந்த படங்கள் எவ்வளவு வசூல் பெற்று முன்னிலையில் உள்ளது என்பதை பார்ப்போம்.
லியோ லியோ லியோ
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்த லியோ திரைப்படம் அக்டோபர் 19ஆம் தேதி வெளிவந்தது. இப்படம் வெளிவந்து கலவையான விமர்சனங்களை பெற்ற போதும் விஜய் ரசிகர்களிடையே மிகப் பெரிய வரவேற்பு பெற்றது. கூடவே வசூலையும் வாரிக் குவித்தது.
அர்ஜுன், த்ரிஷா, சஞ்சய்தத், மன்சூர் அலிகான் மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். இப்படத்தில் நடுத்தர வயதுடைய அப்பாவாவாகவும், அவருடைய கடந்த கால தாதா கேரக்டரிலும் வித்தியாசம் காட்டி அசத்தியிருந்தார் விஜய். அதிலும் ஒரு மிடில் ஏஜ் அப்பாவாக அருமையான நடிப்பைக் கொடுத்திருந்தார் விஜய். லியோ திரைப்படம் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனில் தமிழ்நாட்டில் மட்டும் ரூ. 224 கோடி வசூலித்து வசூல் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் ஜெயிலர்
நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10 அன்று வெளிவந்தது. ஆக்சன் மற்றும் திரில்லர் படமாக இப்படத்தின் கதைக்களம் அமர்ந்திருந்தது. இதில் விநாயகன், ஜாக்கி ஷ்ராப், மோகன்லால், விடிவி கணேஷ், சிவராஜ் குமார், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு என பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.
ஜெயிலர் படம் வசூலில் பட்டையைக் கிளப்பியது. குறிப்பாக தமன்னாவின் காவாலா பாட்டுக்காகவே ரசிகர்கள் அலை மோதினர். படமும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தமிழ்நாட்டு பாக்ஸ் ஆபீஸ் கலெக்ஷனில் 196 கோடி ரூபாய் வசூலை பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளது.
விஜய்யின் வாரிசு
விஜய் நடித்த வாரிசு படத்தை வம்சி பைடிபைலி இயக்கியிருந்தார். இப்படம் ஜனவரி 11ஆம் தேதி வெளிவந்தது. இதில் சரத்குமார், ஷாம், பிரபு, ராஸ்மிகா மந்தனா, சங்கீதா, ஜெயசுதா, பிரகாஷ்ராஜ், போன்ற முக்கிய கதாபாத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படத்தின் பாடல்கள் மிகவும் பிரபலமானது.
குடும்பப் பின்னணியை மையமாகக் கொண்டு இப்படம் உருவானதால் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. தமிழ்நாட்டில் இப்படத்தின் வசூல் ரூ. 142 கோடி ஆகும். டாப் 10 வசூல் படங்களில் விஜய்யின் படங்கள் 2 என்பது குறிப்பிடத்தக்கது.
பொன்னியின் செல்வன் 2
பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் மணிரத்தினம் இயக்கத்தில் ஏப்ரல் 28ஆம் தேதி வெளிவந்தது. இப்படம்
4 டிகே வடிவத்தில் வெளியான முதல் தென்னிந்திய திரைப்படமாகும். இப்படம் வரலாற்றுப் பின்னணியைக் கொண்டு உருவாக்கப்பட்டதாகும். முதல் பாகம் போலவே , இரண்டாவது பாகமும் பிரமாண்டமாக இருந்தது.
முதல் பாதியில் திரிஷாவுக்கு முக்கியத்துவம் இருந்தது. 2வது பாதியில் ஐஸ்வர்யா ராய்க்கு அட்டகாசமான களம் கிடைத்திருந்தது. இதில் திரிஷா, சரத்குமார், பார்த்திபன், ஜெயம் ரவி ,ஐஸ்வர்யா ராய், விக்ரம் போன்ற பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து தங்களின் நடிப்பின் திறமையை அழகாக வெளிப்படுத்தி இருந்தனர். இப்படம் 140 கோடி வசூலை பெற்று நான்காவது இடத்தில் உள்ளது.
துணிவு
நடிகர் அஜித் நடித்த துணிவு திரைப்படத்தை எச்.வினோத் இயக்கியிருந்தார். இப்படம் ஜனவரி 11ஆம் தேதி வெளிவந்தது. போனிகபூர் இப்படத்தை தயாரித்து இருந்தார். இதில் பவானி, அமீர், சிபி, ஜான், ஜி .பி .முத்து சமுத்திரகனி, வீரா, பிரேம் குமார், மஞ்சு வாரியர் போன்ற நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
வங்கியில் நடக்கும் ராபரி நிகழ்வை மையமாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டது. இப்படம் அஜித் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இப்படம் 118 கோடி வசூலில் ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது.
மார்க் ஆண்டனி
இயக்குனர் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடித்த மார்க் ஆண்டனி திரைப்படம் கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி வெளிவந்தது. இதில் விஷால் மற்றும் எஸ் ஜே சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் வித்தியாசமான தோற்றத்தில் நடித்திருந்தனர் . நாயகியாக ரிது வர்மா மற்றும் அனிதா சம்பத், ஒய் ஜி மகேந்திரன், ரெடின் கின்ஸ்லி, நிழல்கள் ரவி, சுனில் போன்ற முக்கிய மிகப்பெரிய நடிகர் பட்டாளமே நடித்துள்ளனர்.
டைம் டிராவல் என்ற பின்னணியில் ஆக்சன் காமெடி கலந்த மசாலா திரைப்படமாக உருவாகியிருந்தது. இப்படம் வெளிவந்து நல்ல ஹிட் கொடுத்தது. பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனில் 58 கோடி வசூல் பெற்று ஆறாவது இடத்தில் உள்ளது.
வடிவேலுவின் மாமன்னன்
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்த மாமன்னன் திரைப்படம் ஜூன் 29ஆம் தேதி வெளியானது. இதில் நடிகர் வடிவேலு முக்கிய தோற்றத்தில் நடித்திருப்பார். தாழ்த்தப்பட்ட மக்களின் மீது நிகழ்த்தப்படும் ஜாதி வன்முறையைக் களமாக கொண்டு இப்படம் உருவானது. இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. நடிகர் வடிவேலு பாடிய ராசக்கண்ணு என்ற பாடல் பட்டி, தொட்டி எங்கும் வைரலானது. இப்பாடல் வரிகள் கேட்போரை கண்கலங்க வைத்தது. இப்படம் 51 கோடி வசூல் பெற்று ஏழாவது இடத்தில் உள்ளது.
சிவகார்த்திகேயனின் மாவீரன்
சிவகார்த்திகேயன் நடித்த மாவீரன் திரைப்படத்தை மடோன் அஸ்வின் இயக்கியுள்ளார். இப்படம் ஜூலை 14ஆம் தேதி வெளிவந்தது. இதில் சிவகார்த்திகேயன், அதிதி சங்கர், சரிதா, மிஸ்கின் போன்ற நட்சத்திரங்கள் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் அரசியல் பின்புலத்தை மையப்படுத்தி நகைச்சுவை கலந்த திரைப்படமாக உருவாகியிருந்தது. படத்தின் திரைக் கதை பிரமாதமாக அமைந்திருந்தது. இப்படம் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனில் 50 கோடி வசூல் பெற்று எட்டாவது இடத்தில் உள்ளது.
ஷாருக்கானின் ஜவான்
ஷாருக்கான் நடித்த ஜவான் திரைப்படத்தை அட்லீ இயக்கினார். இப்படம் செப்டம்பர் 7 அன்று வெளிவந்தது. இப்படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோன் மற்றும் பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்ததற்காகவே இப்படத்தை பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் ரசிகர்களுக்கிடையே எழுந்தது. இப்படத்தில் நடிகர் ஷாருக்கான் இரண்டு வேடங்களில் தந்தை மற்றும் மகன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தியில் மிகப் பெரிய வசூலை வாரிக் குவித்த இப்படம், தமிழ்நாட்டில் 48 கோடி வசூல் பெற்று ஒன்பதாவது இடத்தைப் பிடித்தது.
ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளிவந்த ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் தீபாவளி ட்ரீட்டாக நவம்பர் 10இல் வெளியிடப்பட்டது. இப்படம் மாபெரும் ஹிட் கொடுத்தது. ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ். ஜே சூர்யா வித்தியாசமான தோற்றத்தில் தனது நடிப்பின் திறமையை வெளிப்படுத்தி அசத்தினார். இப்படத்தில் நடித்த ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ் ஜே சூர்யாவை நடிகர் ரஜினிகாந்த் பாராட்டியிருந்தார். இப்படம் தமிழ்நாடு அளவில் 45 கோடி வசூல் பெற்று பத்தாவது இடத்தைப் பிடித்துள்ளது.
இந்த வருடத்தில் விஜய் நடித்த வாரிசு மற்றும் அஜீத் நடித்த துணிவு படம் ஒரே தேதியில் ரிலீஸ் செய்யப்பட்டது என்பது நினைவிருக்கலாம். மேலும் இரு படமுமே சமமான ரேட்டிங் பெற்ற நிலையில் வாரிசு படம் நல்ல வசூல் பெற்றது. இந்த வருடம் உச்ச நடிகர்களில் விஜய் மட்டும் 2 சூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.