டைவர்ஸ் பண்ணப் போறோம்.. ஆனா நாங்க ஃபிரண்ட்ஸ்.. சொல்றது பின்லாந்து பிரதமர்

Aadmika
May 11, 2023,04:46 PM IST
ஹெல்சின்கி : தேர்தலில் தோற்ற பிறகு அரசு மாளிகையை காலி செய்ய தயாராகிக் கொண்டிருக்கும் பின்லாந்து பிரதமர் சன்னா மெரினும் அவரது கணவரும் தற்போது விவாகரத்திற்காக விண்ணப்பித்துள்ளனர். ஆனாலும் இருவரும் தற்போது வரை நண்பர்களாக இருப்பதாக சன்னா தெரிவித்துள்ளார்.

பின்லாந்து பிரதமரான சன்னா மெரினும், அவரது கணவரும் நேற்று விவாகரத்து கோரி கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். இது பற்றி தனது இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போட்டுள்ள மெரின், நாங்கள் இருவரும் இணைந்து விவாகரத்திற்கு விண்ணப்பித்துள்ளோம். 19 வருடங்களாக நாங்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்தோம். இப்போதும் நாங்கள் பெஸ்ட் ஃபிரண்ட்சாக உள்ளோம் என குறிப்பிட்டுள்ளார்.



மெரினின் கணவர் மார்குஸ் ரெய்கோனினும் தங்களின் விவாகரத்து பற்றி இன்ஸ்டாவில் அறிவித்துள்ளார். இவர்களுக்கு 5 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. விவாகரத்து பெற்றாலும் இருவரும் குடும்பத்துடன் நேரத்தை தொடர்ந்து செலவிட உள்ளதாக மெரின் தெரிவித்துள்ளார்.  

ஏப்ரல் மாதம் பின்லாந்தில் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இது மெரினின் சமூக ஜனநாயக கட்சி 200 இடங்களில் 43 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று, மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டது. இந்த தேர்தலில் பழமைவாத தேசிய கூட்டணி கட்சி 48 இடங்களில் வெற்றி பெற்று, ஆட்சியை பிடித்துள்ளது. 

2019 ம் ஆண்டு நடந்த தேர்தலில் பின்லாந்து தேர்தலில் வெற்றி பெற்று தற்போது 37 வயதாகும் மெரின் உலகின் மிக இளம் வயது பிரதமரானார். பின்லாந்தின் மிக பிரபலமான பிரதமராகவும் இவர் இருந்துள்ளார். அதிலும் கொரோனா தொற்று காலங்களில் இவரது நடவடிக்கைகள் இவரை மேலும் பிரபலமாக்கியது. 

2022 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், மெரின், ஃபீனிஷ் பிரபலங்கள் சிலருடன் சேர்ந்து பார்ட்டியில் போதையில் இருந்த வீடியோக்கள் சோஷியல் மீடியாவில் வெளியாகி பெரும் பரபரப்பை கிளப்பியது. அவரின் தனிப்பட்ட வீடியோக்கள் வெளியானதால் அந்நாட்டில் பெரும் குழப்பம் ஏற்பட்டது. மெரின் தலைமையிலான அரசு முறைப்படி தனது ராஜினாமாவை அளித்து விட்டாலும், புதிய அரசு பொறுப்பேற்கும் வரை அரசை கவனித்து கொள்பவராக இருந்து வருகிறார்.