ரஜினி சொன்ன அந்த நண்பர் நடிகர் இவர் தானா?...ஜெயிலரில் வில்லனாக நடிக்க வேண்டியது இவரா?

Aadmika
Jul 31, 2023,04:35 PM IST
சென்னை : ரஜினி நடித்துள்ள ஜெயிலர் படத்தில் வில்லன் ரோலுக்கு முதலில் தேர்வு செய்யப்பட்டது தனது நண்பர் தான் என்றும், நான் வேண்டாம் என்றதால் கடைசி நேரத்தில் அவர் மாற்றப்பட்டதாகவும் ஜெயிலர் ஆடியோ வெளியீட்டு விழாவில் ரஜினி பேசி இருந்தார். இதனால் யார் அந்த நண்பர் நடிகர் என அலசிய ரசிகர்கள் தற்போது கண்டுபிடித்தும் விட்டனர்.

டைரக்டர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள ஜெயிலர் படம் ஆகஸ்ட் 10 ம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. ரஜினியின் 169 வது படமாக உருவாகி உள்ள இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. இந்த படத்தின் ஆடியோ வெளியிட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் சமீபத்தில் மிக பிரம்மாண்டமாக நடந்தது. இந்த விழாவில் ரஜினி சுமார் 45 நிமிடங்கள் பேசினார்.



ரசிகர்களுக்காக குட்டி ஸ்டோரி ஒன்றை சொல்லி, குடி பற்றி மிக முக்கியமான அட்வைசையும் வழங்கினார். பிறகு ஜெயிலர் படம் பற்றி பேசிய ரஜினி, இந்த படத்தில் வில்லன் ரோலில் மிகப் பெரிய நடிகரான எனது நெருங்கிய நண்பரை நடிக்க வைக்க வேண்டும் என நெல்சன் விரும்பினார். வில்லன் ரோல் மிகவும் பவர்ஃபுல்லான ரோல் என்பதால் அவர் நடித்தால் நன்றாக இருக்கும் என நினைத்தார். முதலில் இது பற்றி என்னிடம் கூறினார். முதலில் நான் தயங்கிய போதும் நெல்சன் என்னை பேசி சம்மதிக்க வைத்தார்.

இது பற்றி நானும் எனது நண்பரை தொடர்பு கொண்டு பேசினேன். அவரும் நடிப்பதற்கு ஓகே சொல்லி விட்டார். பிறகு நன்றாக யோசித்து பார்த்தேன், நான் மற்றொரு பெரிய நடிகரை வீழ்த்துவதாக திரையில் நடிக்க வேண்டுமா என யோசித்தேன். எனக்கு அது சரியாக படாததால் நெல்சனிடமும் எனது கருத்தை தெரிவித்தேன். முதலில் யோசித்த அவர், பிறகு நான் சொல்வதை சரி என ஒப்புக் கொண்டார். அதன் பிறகு தான் வில்லன் ரோலில் மலையாள நடிகர் விநாயகத்தை நடிக்க வைத்தோம் என்றார் ரஜினி.

இதனால் ரஜினி சொன்ன அந்த நண்பர் நடிகர் யார் என ரசிகர்கள் அலசி ஆராய துவங்கி, கடைசியாக கண்டுபிடித்தும் விட்டனர். அந்த  நடிகர் வேறுயாரும் இல்லை. நடிகர் கமல்ஹாசன் தானாம். ஜெயிலர் படத்தில் முதலில் வில்லனாக நடிக்க வேண்டியது கமல் தானாம். கமல் தான் ரஜினியின் 50 ஆண்டு கால திரையுலக நண்பர் என்பது அனைவருக்கும் தெரியும்.

ரஜினி - கமல் இருவரும் மீண்டும் ஒரு படத்தில் இணைந்து நடிக்க மாட்டார்களா என அனைவரும் கிட்டதட்ட 35 ஆண்டுகளுக்கும் மேலாக காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அது இப்போது வரை நடிக்காமல் உள்ளது. தலைவர் 171 படத்தில் லோகேஷ் கனகராஜ் ரசிகர்களின் இந்த நீண்ட கால கனவை நினைவாக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.