மறைந்தார் கீதாஞ்சலி அய்யர்.. மறக்க முடியாத தூர்தர்ஷன் செய்தி வாசிப்பாளர்!
Jun 08, 2023,09:52 AM IST
டெல்லி: இந்தியாவின் முதல் பெண் டிவி செய்தி வாசிப்பாளர்களில் முன்னோடியாக திகழ்ந்த கீதாஞ்சலி அய்யர் காலமானார்.
தூர்தர்ஷன் டிவி செய்தி வாசிப்பாளர்களில் மறக்க முடியாதவர் கீதாஞ்சலி அய்யர். அவரது செய்தி வாசிப்பும், உச்சரிப்பும், அவரது ஹேர்ஸ்டைலும் மிகமிக பிரபலமானவை. இந்தியாவின் முதல் பெண் டிவி செய்தி வாசிப்பாளர்களில் அவர் ஒரு முன்னோடியாக திகழ்ந்தவர்.
70 வயதைக் கடந்த நிலையில் பர்கின்சன் நோயால் அவதிப்பட்டு வந்தார் கீதாஞ்சலி அய்யர். வாக்கிங் போயிருந்த அவர் வீடு திரும்பிய நிலையில் மயங்கி விழுந்தார். சில விநாடிகளிலேயே அவர் மரணமடைந்தார்.
கொல்கத்தாவில் உள்ள லோரிட்டோ கல்லூரியில் பட்டம் பெற்றவர் கீதாஞ்சலி அய்யர். 1971ம் ஆண்டு தூர்தர்ஷனில் இணைந்தார். நான்கு முறை சிறந்த ஆங்கருக்கான விருது வாங்கியுள்ளார். இந்திரா காந்தி பிரியதர்ஷினி பெண்கள் விருதையும் 1989ம் ஆண்டு இவர் பெற்றார்.
இவர் செய்தி வாசிக்கிறார் என்றால் குடும்பத்தோடு அமர்ந்து டிவி பார்த்த காலம் அது. டிவியில் செய்தி வாசிப்பு தவிர, நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குவது, விளம்பரங்களில் நடித்தது உள்பட பன்முகக் கலைஞராக திகழ்ந்தார். ஸ்ரீதர் சிர்சாகரின் காந்தன் என்ற டிவி நாடகத்திலும் இவர் நடித்துள்ளார்.