திமுக அரசு சொல்லாததையும் செய்துள்ளது... ஈரோடு பிரச்சாரத்தில் முதல்வர் ஸ்டாலின் பஞ்ச்
Feb 25, 2023,12:47 PM IST
ஈரோடு : திமுக அரசு இதுவரை தேர்தல் அறிக்கையில் சொன்னதையும் செய்துள்ளது. சொல்லாததையும் செய்துள்ளது என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஈரோடு தேர்தல் பிரச்சாரத்தில் பேசி வாக்காளர்களை கவர்ந்துள்ளார்.
காலியாக உள்ளதாக தேர்தல் கமிஷனால் அறிவிக்கப்பட்ட ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 27 ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில் திமுக, அதிமுக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் முக்கிய கட்சிகள் போட்டியிடுகின்றன. ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் பிரச்சாரம் இன்று மாலை 5 மணியுடன் ஓய்கிறது. இதனால் இறுதிக்கட்ட பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.
இந்நிலையில் பிரச்சாரத்தின் கடைசி நாளான இன்று, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஈரோடு கிழக்கு தொகுதியில் பிரச்சாரம் செய்து வாக்கு சேகரித்தார். திறந்த வாகனத்திலும், சாலையில் நடந்து சென்றும் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை ஆதரித்து அவர் வாக்கு சேகரித்தார்.
பிரச்சாரத்தில் பேசிய ஸ்டாலின், திமுக.,வின் அடித்தளமே ஈரோடு தான். மகனின் கடமையை செய்து முடிக்க தந்தை வந்துள்ளார். ஈவிகே சம்பத்தின் மகனுக்காக கருணாநிதியின் மகன் வாக்குகேட்டு வந்திருக்கிறேன். குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 உரிமைத்தொகை பட்ஜெட்டில் அறிவிக்கப்படும். நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதே எனது லட்சியம். திமுக அரசு மக்களுக்காக எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. சட்டசபை தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை தொடர்ந்து நிறைவேற்றி வருகிறோம்.
மண்ணின் மைந்தர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு மாபெரும் வெற்றியை தேடித் தர வேண்டும். மறைந்த திருமகன் ஈவெரா கொகுதி வளர்ச்சிக்காக சிறப்பாக பணியாற்றினார். வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழகத்தில் தான் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. திமுக அரசு தேர்தல் அறிக்கையில் சென்னதையும் செய்துள்ளது. சொல்லாததையும் செய்துள்ளது என தெரிவித்தார்.
என் உயிரோடு கலந்த ஈரோடு வாக்காளர் பெருமக்களே என ஸ்டாலின் பேச துவங்கியதும் கூடி இருந்த தொண்டர்களும், மக்களும் கோஷமிட்டு வரவேற்பு தெரிவித்தனர்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் 27ம் தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் இன்று மாலை 5 மணியுடன் முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.