ஈரோடு இடைத்தேர்தல்...ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் வாபஸ்?

Aadmika
Feb 04, 2023,11:03 AM IST
சென்னை : அதிமுக.,வில் தினம் தினம் நடக்கும் திருப்பங்கள் தமிழக அரசியலில் பதற்றத்திற்கு பஞ்சம் இல்லாமல் வைத்துள்ளது. அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்திலும், மீடியாக்கள் வட்டாரத்தில் கொஞ்சமும் குறையாமல் உள்ளது.



பிப்ரவரி 27 ம் தேதி நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கு ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் தனித்தனியாகர் வேட்பாளர்களை அறிவித்தனர். இருவரும் தங்களுக்கு தான் இரட்டை இலை சின்னம் வேண்டும் என கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இரட்டை இலை சின்னம் கேட்டு சுப்ரீம் கோர்ட்டில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு தாக்கல் செய்த இடையீட்டு மனு சுப்ரீம் கோர்ட்டில் நேற்று னிசாரைணக்கு வந்தது. 

மனுவை விசாரித்த நீதிபதிகள், இரண்டு தரப்பினரும் சேர்ந்து அதிமுக பொதுக்குழுவை கூட்டி வேட்பாளரை அறிவிக்க வேண்டும். வேட்பாளர் யார் என்பது முடிவு செய்த பிறகு அதை தேர்தல் கமிஷனிடம் தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டது. இதனால் பொதுக்குழுவை கூட்டுவது பற்றி என்ன முடிவு எடுக்க போகிறார்கள் என அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். இந்நிலையில் ஓபிஎஸ் தரப்பில் ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட செந்தில் முருகன், இரட்டை இலை சின்னம் தனக்கு ஒதுக்க வேண்டும் என கேட்டு தேர்தல் கமிஷனிடம் மனு அளித்துள்ளதாக தகவல் வெளியானது.

ஆனால் இன்று (பிப்ரவரி 04) அதிமுக.,வில் புதிய திருப்பமாக ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் செந்தில் முருகன் ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிட போவதில்லை என்றும், அவர் தனது வேட்புமனுவை வாபஸ் பெற்றிருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. நேற்று ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ்.,ஐ பாஜக தலைவர் அண்ணாமலை, பாஜக மேலிட பொறுப்பாளர் சிடி ரவி ஆகியோர் தனித்தனியே சந்தித்து பேசிய போது, வேட்பாளரை திரும்பப் பெறுமாறு ஓபிஎஸ் இடம் வலியுறுத்தியதாக சொல்லப்படுகிறது.

பாஜக தலைமை கேட்டுக் கொண்டதாலேயே ஓபிஎஸ் தரப்பு வேட்பாளரை திரும்பப் பெற்றுள்ளதாக சொல்லப்படுகிறது. ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் வாபஸ் பெற்றது உறுதியாகும் பட்சத்தில் ஈபிஎஸ் அணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள தென்னரசுவிற்கே இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்பட வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.