ஈரோடு கிழக்கு: ஓங்கியது "கை".. 66,000 ஓட்டு வித்தியாசத்தில் வென்றார் ஈவிகேஎஸ் இளங்கோவன்
Mar 02, 2023,09:22 AM IST
ஈரோடு : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 66,000 ஓட்டு வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ.,வாக இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகன் திருமகன் ஈவேரா திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மரணமடைந்தார். இதையடுத்து காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்ட ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.
இதில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியின் ஈவிகேஎஸ் இளங்கோவனும், அதிமுக சார்பில் தென்னரசு, நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீதன், தேமுதிக சார்பில் ஆனந்த் ஆகியோர் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டிருந்தனர்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல் பிப்ரவரி 27 ம் தேதி நடைபெற்றது. இதில் பதிவான ஓட்டுக்கள் இன்று (மார்ச் 02) காலை துவங்கி எண்ணப்பட்டு வந்தன.
முதல் சுற்றிலிருந்தே ஈவிகேஎஸ் இளங்கோவன் முன்னிலை வகித்து வந்தார். அவரை ஒரு சுற்றில் கூட அதிமுக வேட்பாளர் தென்னரசு முந்த முடியவில்லை. இறுதியாக 15வது சுற்றின் முடிவில் ஈவிகேஎஸ் இளங்கோவன் 66,000 ஓட்டு வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவு செய்தார்.
வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள்:
ஈவிகேஎஸ் இளங்கோவன் (காங்கிரஸ்) - 1,10,556
தென்னரசு (அதிமுக) - 43,981
மேனகா நவநீதன் (நாம் தமிழர் கட்சி) - 10,804
ஆனந்த் (தேமுதிக) - 1301