செந்தில் பாலாஜியை காவேரி மருத்துவமனைக்கு மாற்றியதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு

Su.tha Arivalagan
Jun 19, 2023,11:30 AM IST

டெல்லி:  தமிழ்நாடு அமைச்சர் செந்தில் பாலாஜியை காவேரி மருத்துவமனைக்கு மாற்றியதை எதிர்த்து அமலாக்கத்துறை சார்பில் உச்சநீதிமன்றத்தில் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணை ஜூன் 21ம் தேதி வருகிறது.


மது விலக்கு மற்றும் மின்சாரத் துறை அமைச்சராக இருந்து வந்த செந்தில் பாலாஜி  மீது நிலுவையில் இருந்து வந்த பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சமீபத்தில் தொடர் ஆய்வுகள் மற்றும் ரெய்டுகள் நடத்தினர். இதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்டதும் தனக்கு நெஞ்சு வலிப்பதாக கூறி அவர் கதறி அழுததால் அவரை உடனடியாக அரசு ஓமந்தூராரர் மருத்துவமனைக்குக் கொண்டு போய்ச் சேர்த்தனர்.




அங்கு அவருக்கு டாக்டர்கள் பரிசோதனை செய்ததில் 3 இடங்களில்  இதயத்தில் அடைப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. அவருக்கு பைபாஸ் அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. இதையடுத்து அவரை தனியார் மருத்துவமனைக்கு மாற்ற அனுமதி கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு செய்யப்பட்டது. அதை விசாரித்த உயர்நீதிமன்றம் செந்தில் பாலாஜியை தனியார் மருத்துவமனைக்கு மாற்ற உத்தரவிட்டது. இதையடுத்து அவர் உடனடியாக காவேரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.


அதேசமயம், அவருக்கு அமலாக்கத்துறையின் கஸ்டடிக்கு அனுமதி அளித்து செஷன்ஸ் கோர்ட் உத்தரவிட்டது. ஆனால் இதுவரை அமலாக்கத்துறை செந்தில் பாலாஜியை விசாரிக்கவில்லை. தொடர்ந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் செந்தில் பாலாஜி.


இந்த நிலையில் செந்தில் பாலாஜியை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்க உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து அமலாக்கத்துறை சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு செய்துள்ளது. இதுதொடர்பாக சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா உச்சநீதிமன்றத்தில் மனு செய்துள்ளார். 


அதில், செந்தில் பாலாஜி மிகவும் சக்தி வாய்ந்த அமைச்சர். அவர் இன்னும் பதவியில் தொடருகிறார். அவரை தனியார் மருத்துவமனைக்கு மாற்ற அனுமதி அளித்தது தவறானது. எனவே இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். இந்த மனுவை ஜூன் 21ம் தேதி விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புக் கொண்டுள்ளது.