பாதிப் பேருக்கு சம்பளமே இன்னும் வரலை.. பரிதவிக்கும் டன்ஸோ ஊழியர்கள்

Su.tha Arivalagan
Jul 11, 2023,03:48 PM IST
டெல்லி: டன்ஸோ ஊழியர்கள் பாதிப் பேருக்கு மேல் இன்னும் ஊதியம் பெறாமல் சிரமப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனம் மற்றும் கூகுள் ஒருங்கிணைப்புடன் இயங்கி வரும் டெலிவரி ஆப்பான டன்ஸோவில் பணியாற்றும் ஊழியர்கள் பாதிப் பேருக்கு இன்னும் ஜூன் மாத சம்பளம் வரவில்லையாம். கிட்டத்தட்ட 500 பேருக்கு மேல் சம்பளம் வரவில்லை என்று சொல்லப்படுகிறது.



இந்த சம்பள தாமதம் நிறுவனத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று டன்ஸோ நிர்வாகம் கருதுகிறதாம். ஆனால் வேறு வழியில்லாமல்தான் இந்த தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் அது சொல்கிறது. 

இந்த ஆண்டு தொடக்கத்தில்தான் டன்ஸோ நிறுவனம் பாதி ஊழியர்களை வேலையை விட்டு அனுப்பியது. மேலும் பல்வேறு நிதிக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளையும் அது முடுக்கி விட்டது. அதேசமயம் கடந்த ஏப்ரல் மாதம் அது 75 மில்லியன் டாலர் நிதியையும் திரட்டியது. இப்படி நடவடிக்கை எடுத்தும் கூட பாதி ஊழியர்களுக்கு சம்பளம் தர முடியாத நிலையில் டன்ஸோ இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.