"இதை விட முட்டாள்தனம் இருக்க முடியுமா?".. டாக்டர் ராமதாஸ் கேள்வி

Su.tha Arivalagan
Jun 09, 2023,10:30 AM IST

சென்னை: குஜராத் நீதிமன்றத்தில் நீதிபதி ஒருவர் மனுஸ்மிருதியை மேற்கோள் காட்சி கூறிய கருத்துக்களுக்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

குழந்தைத் திருமணத்தை ஆதரிப்பது போல அந்த நீதிபதி கருத்து தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இது கடும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் குறித்துத்தான் ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார்.



இதுதொடர்பாக அவர் போட்டுள்ள ட்வீட்:

இதை விட முட்டாள்தனம் இருக்க முடியுமா? குஜராத் உயர்நீதிமன்றத்தில் ஓர் வழக்கு. 

பாலியல் வன்கொடுமையில் பாதிக்கப்பட்ட 17 வயது  பெண்ணின் கருவை கலைக்க அனுமதி கோரி அவரது பெற்றோர் முறையிடுகின்றனர். அந்த வழக்கை விசாரித்த குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதி சமீர் தவே, ‘‘ அந்தக் காலத்தில் பெண்கள்  14&15 வயதில் திருமணம் செய்து கொள்வதும், 17 வயது ஆவதற்குள் குழந்தை பெற்றுக் கொள்வதும் இயல்பானது தான். வேண்டுமானால் மனுஸ்மிர்தி நூலை படித்துப் பார்த்து இதை உறுதி செய்து கொள்ளுங்கள்’’ என்று கூறியிருக்கிறார்.

அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் இன்னொரு வழக்கு...

திருமணம் செய்வதாகக் கூறி தம்முடன் பழகி, ஏமாற்றிய காதலனுடன் திருமணம் செய்து வைக்க ஆணையிடக் கோரி பாதிக்கப்பட்ட பெண் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 

அந்த வழக்கை விசாரித்த நீதிபதியிடம் குற்றஞ்சாட்டப்பட்ட இளைஞர்,‘‘ அந்த பெண்ணுக்கு  'மாங்கல்ய பாக்கியம் இல்லை' என்பதால் அவரை திருமணம் செய்ய முடியாது’’ என்று கூறுகிறார்.

அதைக்கேட்ட நீதிபதி பிரிஜ்ராஜ் சிங், அப்படியா? என்று பதறியதுடன், அவரது ஜாதகத்தை ஆராயந்து அந்தப் பெண்ணுக்கு மாங்கல்யா பாக்கியம் இருக்கிறதா என்பது குறித்து அறிக்கை அளிக்கும்படி லக்னோ பல்கலைக் கழகத்தின் ஜோதிடத்துறைக்கு ஆணையிட்டுள்ளார்.

இப்போது சொல்லுங்கள்....

இதை விட முட்டாள்தனம் இருக்க முடியுமா? என்று கேட்டுள்ளார் டாக்டர் ராமதாஸ். அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதியின் இந்த உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து தடை விதித்தது. இந்த உத்தரவு கவலையை ஏற்படுத்துவதாகவும் அது தெரிவித்திருந்தது.

இப்போது குஜராத் நீதிபதி ஒருவர் மனஸ்மிருதியை உதாரணம் காட்டி குழந்தைத் திருமணம் எல்லாம் சகஜமானதே என்பது போல கருத்து தெரிவித்திருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.