சந்திரயான் 3 திட்டத்திற்காக இஸ்ரோ செலவழித்த தொகை எவ்வளவு தெரியுமா ?

Aadmika
Aug 18, 2023,09:36 AM IST
டில்லி : நிலவின் தென் பகுதியை ஆய்வு செய்வதற்காக இந்தியா அனுப்பி உள்ள சந்திரயான் 3 விண்கலம் பற்றி அடுத்தடுத்த நிகழ்வுகளைத் தான் உலகமே கூர்ந்து கவனித்து வருகிறது. இந்த சமயத்தில் சந்திரயான் 3 திட்டத்திற்காக இஸ்ரோ செலவழித்த தொகை குறித்த தகவலை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.

சந்திரயான் 3 விண்கலம் ஜூலை 14 ம் தேதி விண்ணிலும் செலுத்தப்பட்டது. இது ஆகஸ்ட் 05 ம் தேதி நிலவின் நீள்வட்ட பாதைக்குள் நுழைந்தது. ஆகஸ்ட் 6, 9, 14, 16 என படிப்படியாக நிலவை நெருங்கி வருகிறது சந்தியான் 3. லேட்டஸ்ட் அப்டேட் படி, ஆகஸ்ட் 16 ம் தேதி, சந்திரயான் 3 விண்கலத்தில் இருந்து லேண்டர் விக்ரம் வெற்றிகரமாக தனியாக பிரிந்து, நிலவின் தரைப்பரப்பை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. ஆகஸ்ட் 23  ம் தேதி இது நிலவில் தரையிறங்கும் என சொல்லப்படுகிறது.



இது நிலவை நோக்கிய ஆய்வில் இந்தியாவின் மிகப் பெரிய வரலாற்று சாதனையாகும். இந்த மைல்கல் சாதனை பற்றிய தகவலை இஸ்ரோ தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. அடுத்த கட்டமாக சந்திரயான் 3 விண்கலத்தில் இருந்து பிரிந்து சென்று லேண்டர் விக்ரம், நிலவின் தென் பகுதியில் தரையிறங்கும் அந்த நிமிடத்தை எதிர்பார்த்து அனைவரும் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் இஸ்ரோ சந்திரயான் 3 திட்டத்திற்காக எவ்வளவு தொகை செலவிடப்பட்டுள்ளது என்ற விபரத்தை வெளியிட்டுள்ளது. அதன் படி, ஏறக்குறைய ரூ.615 கோடி சந்திரயான் 3 திட்டத்திற்காக செலவிடப்பட்டுள்ளது. இது தவிர லேண்டருக்கு ரூ.250 கோடி, சந்திரயான் 3 விண்ணில் செலுத்துவதற்காக ரூ.365 கோடி செலவிடப்பட்டுள்ளது.

2008 ம் ஆண்டு அக்டோபர் மாதம் விண்ணில் செலுத்தப்பட்ட சந்திரயான் 1 திட்டத்திற்காக ரூ.386 கோடியும், சந்திரயான் 2 திட்டத்திற்காக ரூ.978 கோடியும் செலவிடப்பட்டுள்ளது. இதில் ஆர்பிட்டர், லேண்டர், ரோவர் உள்ளிட்டவற்றிற்காக ரூ.603 கோடி செலவிடப்பட்டுள்ளது.