டில்லிக்கு கடிதம் எழுதுவீங்களா?...கவர்னரை கேள்வி கேட்டு போஸ்டர் ஒட்டிய திமுக.,வினர்
Jun 30, 2023,11:07 AM IST
சென்னை : அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கை மற்றும் குற்றச்சாட்டுக்களை காரணம் காட்டி தமிழக அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்கி தமிழக கவர்னர் ரவி நேற்று உத்தரவு பிறப்பித்தருந்தார். இதற்கு திமுக.,வினர் கடும் எதிர்ப்பும், கண்டனமும் தெரிவித்து வருகின்றனர்.
அமைச்சரை நீக்குவதற்கு கவர்னருக்கு அதிகாரம் கிடையாது. இதை நாங்கள் சட்டப்படி சந்திப்போம் என தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறி இருந்தார். இந்நிலையில் செந்தில் பாலாஜியை நீக்கியதாக கவர்னரின் உத்தரவு வெளியான சில மணி நேரங்களிலேயே சென்னையில் அண்ணாசாலை உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் கவர்னரை கேள்வி கேட்டு திமுக., சார்பில் பல இடங்களில் போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது.
அதில், மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள 41 பேரின் போட்டோக்கள், அவர்கள் வகிக்கும் பதவி, அவர்கள் மீதுள்ள வழக்குகளின் எண்ணிக்கை ஆகியவற்றை குறிப்பிட்டு, குற்றப் பின்னணியுடன் மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள இவர்களை அமைச்சரவையில் இருந்து நீக்கும் படி டில்லிக்கு கடிதம் எழுதுவீர்களா? என கேட்டு போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. திமுக.,வை சேர்ந்த வழக்கறிஞர் ஹேமந்த் அண்ணாதுரை என்பவர் சார்பில் இந்த போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. இது பாஜக மற்றும் திமுக இடையேயான மோதலை அதிகப்படுத்தி, தமிழக அரசியலில் புதிய பரபரப்பை கிளப்பு உள்ளது.