செக் மோசடி வழக்கு : டைரக்டர் லிங்குசாமிக்கு 6 மாதம் சிறை தண்டனை உறுதியானது

Aadmika
Apr 13, 2023,10:24 AM IST
சென்னை : செக் மோசடி வழக்கில் டைரக்டர் லிங்குசாமிக்கு 6 மாதம் சிறை தண்டனையை உறுதி செய்து சென்னை சைதாப்பேட்டை கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.

2001 ம் ஆண்டு ரிலீசான ஆனந்தம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு டைரக்டராக அறிமுகமானவர் லிங்குசாமி. ரன், சண்டக்கோழி, பையா, வேட்டை, அஞ்சான் என வரிசையாக பல பிளாக்பஸ்டர் படங்களைக் கொண்டுத்தவர். டைரக்டர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர் என பன்முகத் தன்மை கொண்ட லிங்குசாமி, திருப்பதி பிரதர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.  கடைசியாக தி வாரியர் என்ற படத்தை இயக்கினார்.



தமிழ் மற்றும் தெலுங்கில் சில ஹீரோக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், விரைவில் லிங்குசாமி தனது புதிய பட வேலைகளை துவக்குவார் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் எண்ணி ஏழு நாள் என்ற படத்திற்காக வாங்கிய கடனை திருப்பி செலுத்தாமல், போலியாக செக் கொடுத்து ஏமாற்றியதாக பிவிபி கேப்பிட்டல்ஸ் நிதி நிறுவனம் லிங்குசாமி மற்றும் அவரது சகோதரர் மீது செக் மோசடி வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கை விசாரித்த சென்னை சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றம், லிங்குசாமி மற்றும் அவரது சகோதரருக்கு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6 மாதம் சிறை தண்டனை விதித்திருந்தது.

இந்த தண்டனையை எதிர்த்து லிங்குசாமி தரப்பில் மேற்முறையீடு செய்யப்பட்டிருந்தது. இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சைதாப்பேட்டை கோர்ட், லிங்குசாமி தரப்பில் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்ததுடன், ஏற்கனவே விதிக்கப்பட்ட 6 மாத கால சிறை தண்டனையையும் உறுதி செய்துள்ளது. நிதி நிறுவனத்திடம் வாங்கிய கடனை வட்டியுடன் திருப்பி செலுத்த வேண்டும் என்ற உத்தரவையும் உறுதி செய்துள்ளது. 

2014 ம் ஆண்டு கார்த்தி, சமந்தா நடித்த எண்ணி ஏழு நாள் என்ற படத்தை தயாரிப்பதற்காக ரூ.1 கோடியே 3 லட்சம் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் சார்பில் கடனாக வாங்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த தொகையை தராததுடன், படத்தையும் தயாரிக்காததால் பணத்தை பலமுறை திருப்பிக் கேட்டும் லிங்குசாமி தரப்பில் பதில் அளிக்காததால் வழக்கு தொடரப்பட்டது.