"தர்மபுரி திமுக எம்பி"... 2 ஏசி ஆம்புலன்ஸ்.. ஒரு வீடியோ மீம்.. கூடவே ஒரு செல்லக் குமுறல்!

Su.tha Arivalagan
Jul 06, 2023,09:38 AM IST
தர்மபுரி: தர்மபுரி தொகுதி திமுக எம்.பி டாக்டர் செந்தில்குமாரின் 2 டிவீட்டுகள் டிவிட்டரில் பேசு பொருளாகியுள்ளன.

ஒன்று - அவர் தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 2 ஏசி ஆம்புலன்ஸ்களை வாங்கி தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு வழங்கியது.



2வது - இளைஞர் அணி மாவட்ட நிர்வாகிகள் நியமனம் தொடர்பாக அவர் வெளியிட்ட மனக்குமுறல்.

தர்மபுரி திமுக எம்பி செந்தில்குமார் ஆக்டிவாக செயல்படும் விரல் விட்டு எண்ணக் கூடி எம்பிக்களில் சிலரில் ஒருவர் ஆவார். தொடர்ந்து தொகுதிக்கான பணிகளில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். எதிர்க் கட்சியினருக்கு குறிப்பாக பாஜகவுக்கு எதிராக சமூக வலைதளங்களில் களமாடி வரும் அதே நேரத்தில் தொகுதிக்கான பணிகளிலும் அவர் அக்கறை காட்டி வருகிறார்.

சமீபத்தில் தனது தொகுதியில் எம்பி நிதியிலிருந்து அதி நவீன பஸ் ஷெல்டர் கட்டிக் கொடுத்திருந்தார். தற்போது அரூர் மற்றும் பெண்ணாகரம் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைகளில் குழந்தை பிரசவித்த தாய்மார்கள் வீடு திரும்ப வசதியாக ஏசி வசதியுடன் கூடிய ஆம்புலன்ஸ்களை வழங்கியுள்ளார்.

தமிழகத்தில் இதுபோல குழந்தை பிரசவித்த தாய்மார்களுக்கு இலவச பிரத்யேக ஏசி ஆம்புலன்ஸ் வசதி செய்யப்பட்டிருப்பது இதுவே முதல் முறையாகும். ஒவ்வொரு ஆம்புலன்ஸும் ரூ. 24 லட்சம் செலவில் வாங்கப்பட்டுள்ளது. 12 இருக்கைகள் கொண்டதாகும். ஒரு வாகனத்தில் ஒரே நேரத்தில் 6 பேர் வரை (பிரசவித்த தாய்மார் + அட்டெண்டர்) செல்ல முடியும் என்பது குறிப்பிடத்தக்கது

வீடியோ மீம்

இந்த செயல் திமுகவினரிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. விடுவார்களா என்ன.. உடனே வீடியோ மீம்ஸ் போட்டு விட்டனர்.. எப்படி தெரியுமா.. நாயகன் படத்தில் வரும் கமல்ஹாசன் - டெல்லி கணேஷ் காமெடியை வைத்து. அதில் வரும் ஆம்புலன்ஸ் வாங்கும் சீனை வைத்து இதைக் கோர்த்துப் போட்டுள்ளனர். 



இந்த வீடியோ மீமைப் பார்த்து அடடே.. இது செமையா இருக்கே என்று வாய் விட்டு சிரித்து ரசித்த செந்தில்குமார், உடனே அதை ரீடிவீட் செய்து, ஃபேன்மேட் மீம் என்று போட்டு சிலாகித்துள்ளார். இதையும் திமுகவினர் ரீடிவீட் செய்து வருகின்றனர்.

ஒரு குமுறல்

இப்படி ஒரு பக்கம் சந்தோஷமாக ஆம்புலன்ஸ் வந்ததை கொண்டாடி வந்த நிலையில் மறுபக்கம் ஒரு சின்னக் குமுறலையும் வெளியிட்டுள்ளார் டாக்டர் செந்தில்குமார்.தர்மபுரி மாவட்ட இளைஞர் அணி நிர்வாகிகள் நியமனம் தொடர்பாக அவர் தெ��ிவித்திருந்த அதிருப்தி அது.


அந்த டிவீட்டில், இளைஞர் அணியைப் பொறுத்தவரை நியமனத்தில் சரியான முடிவுகள் எடுக்கப்படும் என உறுதியாக நம்புபவன். தர்மபுரி மாவட்ட அறிவிக்கப்பட்ட இரு அமைப்பாளர்களை விட  தகுதி வாய்ந்த நபர்களுக்கு அந்த வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது வேதனை அளிக்கிறது.

இது போல் நடந்துவிடகுடாது என பல கடிதங்கள் அளித்தும் பயனில்லை என்று பகிரங்கமாகவே தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளார். இந்த அதிருப்திக்கு பலரும் வந்து பதிலளித்துச் செல்கின்றனர்.  இருப்பினும் இதுதொடர்பாக திமுக தரப்பிலிருந்து இதுவரை எந்தப் பதிலும் வரவில்லை.